ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி திட்டத்தில் குளறுபடி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரணை; கொரோனா பரவலை தடுக்க தேசிய அளவில் கொள்கை வகுக்க அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாலும், தடுப்பூசி போடும் திட்டத்தில்பெரும் குளறுபடி நிலவுவதாலும் உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இது பற்றி தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து நேற்று விசாரித்த அது, மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தேசிய அளவிலான கொள்கையை வகுக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கடுமையாக தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு லட்சம் லட்சமாக அதிகரித்து வருகிறது.

ஒரே நேரத்தில் இவ்வளவு கொரோனா நோயாளிகள் குவிவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை. தீவிரமாக பாதித்துள்ள நோயாளிகளுக்கு அளிக்க மருத்துவ ஆக்சிஜனும் இல்லை. இதனால், நோயாளிகள் அதிகளவில் இறந்து வருகின்றனர். சிகிச்சைக்கு தேவையான மருந்துகளும் போதிய அளவில் கிடைக்கவில்லை. தடுப்பூசி போடப்படுவதிலும் பெரும் குளறுபடிகளும், குழப்பங்களும் நிலவுகின்றன. இதனால், நாடு முழுவதும் மக்களிடம் பீதியும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பிரச்னைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. இதைத் தொடர்ந்து தலைமை எஸ்.ஏ.பாப்டே பிறப்பித்த உத்தரவில், ‘நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர். மேலும், அதிகப்படியான உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பது, அத்தியாவசிய மருந்து பொருட்கள் கிடைப்பது, அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பது மற்றும் மாநில அரசுகள் அமல்படுத்தும் பொது முடக்கம் ஆகிய நான்கும் மிகவும் அத்தியாவசியமானவை என நீதிமன்றம் கருதுகிறது.

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த கொள்கை வகுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. அதனால், அது குறித்த முழு அறிக்கை கொண்ட திட்டத்தை நாளை (இன்று) மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இதற்காக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது,’ என கூறினார். மேலும், வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

* மோடி இன்றும் ஆலோசனை

கொரோனா தொற்று பரவல், தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து மாநில அரசுகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடியும் அடிக்கடி  ஆலோசனைகள் செய்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அதேபோல், பல்வேறு துறைகளை சேர்ந்த உயர்மட்ட குழுவுடன் இன்றும் அவர் ஆலோசனை நடத்துகிறார். இதற்காக, மேற்கு வங்கத்தில் இன்று பங்கேற்க இருந்த தேர்தல் பிரசார கூட்டங்களையும் ரத்து செய்து விட்டதாக டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

* உயர் நீதிமன்றங்களில் விசாரித்தால் குழப்பம்

தலைமை நீதபதி பாப்டே தனது உத்தரவில் மேலும், ‘‘நாடு முழுவதிலும் 6 உயர் நீதிமன்றங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமை ஆகியவை குறித்து தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வரப்படுகிறது. இதில், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு உயர் நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், பொதுப் பிரச்னையாக இருக்கக் கூடிய இந்த விவகாரத்தில் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இந்த வழக்குகளை மொத்தமாக நாங்களே விசாரிக்க விருக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு உதவ, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே நியமிக்கப்படுகிறார்,’ என தெரிவித்தார்.

Related Stories: