பற்றாக்குறையால் பலியாகும் கொரோனா நோயாளிகள்: 3 நிமிடம் ‘ஆக்சிஜன்’ சப்ளை கட் ஆனால் மரணம்தான்..! தமிழகத்தை போல் அரியானாவிலும் கை வைத்த மத்திய அரசு

புதுடெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலர் இறந்து வரும் நிலையில், தமிழகத்தை போன்று அரியானாவிலும் மத்திய அரசு அம்மாநில அரசின் அனுமதி பெறாமல் ஆக்சிஜனை எடுத்து சென்றுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் உள்ள ஜாகீர் ஹுசைன் நகராட்சி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டிருந்த கொள்கலனில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதால், கொரோனா நோயாளிகளின் வார்டுகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து 24 கொரோனா நோயாளிகள் ெதாடர்ந்து சுவாசிக்க சிரமப்பட்டு இறந்தனர். நாடு முழுவதும் ஆக்சிஜன் கிடைக்காமல் தினமும் பல நோயாளிகள் இறந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறாக ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் பெரும் சவாலாக எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு கடந்த 6 மாதமாக வழக்கத்திற்கு மாறாக அதிகளவு மருத்துவ ஆக்சிஜனை ஏற்றுமதி செய்துள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்றவுடன், பக்கத்து மாநிலமான அரியானாவில் இருந்து அம்மாநில அரசின் அனுமதியின்றி ஆக்சிஜனை மத்திய அரசு லோடு லோடாக எடுத்து சென்றது. இதனை தடுப்பதற்காக அம்மாநில பாஜக அரசு, ஆக்சிஜன் டேங்கர் லாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் இருந்து மாநில அரசிடம் அனுமதி பெறாமல் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பி உள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. மருத்துவ உலகில் இதுவரை பார்க்காத வகையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக்சிஜன் தேவை எவ்வளவு முக்கியம் என்பதும் தற்போது தான் பலருக்கு தெரியவருகிறது. நாம் வாழும் காற்று மண்டலத்தில் சுற்றியுள்ள 20.9 சதவீதம் ஆக்சிஜன் என்ற வேதிப்பொருள்தான். ஒருவர் நோயால் பாதிக்கப்படும்போது, தூய்மையான ஆக்சிஜன் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ், நுரையீரலை அதிகம் பாதிக்கிறது என்பதால், இந்த நோயாளிகளின் உயிரைக் காக்க வெளியிலிருந்து மருத்துவ ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.

இன்றைய நிலையில், நாடு முழுவதும் லட்சக்கணக்கான நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தெருதெருவாக அலைவதை பார்க்க முடிகிறது. மருத்துவமனைகளிலும், கிடங்குகளிலும், தொழிற்சாலைகளிலும் கிடைக்காததால் ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பல மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காலி சிலிண்டர்களுடன் ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளின் வாயிலில் காத்திருக்கும் அவலம் ஊடகங்களில் வெளியாக ஆரம்பித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியானது, பெரும்பாலும் காற்று மண்டலத்தில் இருந்துதான் சேகரிக்கப்படுகிறது. அவை, சுத்தப்படுத்தி உயர் அழுத்த கலன்களுக்குள் கொண்டுசென்று குளிர்விக்கின்றனர். கொள்கலனில் உள்ள ஆக்சிஜன் ஒரு கட்டத்தில் திரவமாக மாறி 195 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு இருக்கும். ஆக்சிஜனுக்கும் நைட்ரஜனுக்கும் வெப்பநிலையில் 5 டிகிரி வித்தியாசம் என்பதால், ‘ஃப்ராக்ஷனல் டிஸ்டிலேஷன்’ என்ற முறையில் ஆக்சிஜனும் நைட்ரஜனும் வெவ்வேறு வெப்பநிலையில் பிரித்து எடுக்கப்படும்.

அந்த ஆக்சிஜன் பிறகு சிலிண்டர்களிலோ, டேங்கிலோ சேர்த்து வைக்கப்படும். திரவ வடிவில் சேகரிக்கப்பட்ட ஆக்சிஜன், சிலிண்டர்களில் வாயு வடிவில் சேகரிக்கப்படும். இதை, மிக குறைந்த வெப்பநிலையில்தான் சேமிக்கமுடியும் என்பதால், இரண்டு வால்வுகள் கொண்ட இரட்டை அடுக்கு கொள்கலன்களில் சேமித்து, வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர். அதேபோல் தொழில்துறைக்கும் இதேமாதிரி உற்பத்தி செய்யப்பட்டே ஆக்சிஜன்தான் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனில் கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன் போன்றவை இருக்கக்கூடாது. 99 சதவீதம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். வெளிமார்க்கெட்டில் ஆக்சிஜன் விலையை பொருத்தமட்டில் ஒரு கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் விலை 25 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. திரவ வடிவில் என்றால் ஒரு கியூபிக் மீட்டர் 78 ரூபாய் என்ற விலையிலும், மருத்துவமனைகளில் படுக்கை உயரத்திற்கு உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் விலை 60 முதல் 70 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.

ஆக்சிஜனை நீண்ட நாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடியாது என்பதால், அவை மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கடந்தாண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு, பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் தங்களது சேமிப்புத் திறனை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சிறிய மருத்துவமனைகள் சிலிண்டர் வடிவில் ஆக்சிஜனை சேமிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.மருத்துவ துறையில் ஆக்சிஜன் தேவை குறித்து நிபுணர்கள் கூறுகையில், ‘ஒரு நபருக்கு தொடர்ந்து 30 விநாடிகள் முதல் 180 விநாடிகள் வரை சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால், அவர் மயக்கமடைவார். ெதாடர்ந்து 3 நிமிடங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்பட்சத்தில், மூளையின் செல்கள் செயலிழந்து அந்த நபர் இறப்பார். மனிதனின் அனைத்து நினைவுகளும் சுவாசிக்கப்படும் ஆக்சிஜனில் இருந்துதான் இயங்குகின்றன. நாசிக்கில் நடந்த துயர சம்பவம், கவனக்குறைவால் ஏற்பட்டது’ என்றனர்.

Related Stories: