சித்திரை திருவிழா இன்று தொடக்கம்: அழகர்கோயில் வளாகத்தில் நாளை சுவாமி புறப்பாடு

அலங்காநல்லூர்: அழகர்கோயிலில் சித்திரை திருவிழா இன்று மாலை நடக்கிறது. கோயில் வளாகத்தில் நாளை சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவில், கள்ளழகர் கோயில் சித்திரை பெருந்திருவிழாவிற்கு, கடந்த வருடம் கொரோனா  தொற்று காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கோயில் வளாகத்திற்குள்ளேயே அனைத்து வைபவங்களும் ஆகமவிதிப்படி நடத்தப்பட்டன. கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த ஆண்டு கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்குவதற்கு ஐகோர்ட் கிளை அனுமதி மறுத்துவிட்டது.

இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர், பட்டர்களிடம் கருத்து கேட்டனர். அவர்களது ஆலோசனைப்படி இந்த வருடம் கோயில் வளாகத்திலேயே சித்திரை திருவிழாவை ஆகமவிதிப்படி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாளுக்கு ஆகமவிதிப்படி இன்று மாலை பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. நாளை (ஏப்.23) மாலை 6 மணிக்கு கோயில் வெளி பிரகாரத்தில் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதி வழியாக பவனி வந்து திருக்கல்யாண மண்டபத்தில் காட்சியளிக்கிறார். அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்யலாம். 24, 25 ஆகிய தேதிகளில் கோயில் வளாகத்திலேயே வழக்கம் போல் மாலை 6 மணியளவில் திருவிழா நிகழ்ச்சி நடைபெறும். 26ம் தேதி 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் எதிர்சேவை நிகழ்வு, கள்ளழகர் திருக்கோலத்துடன் நடைபெறும்.

27ம் தேதி காலை 8 மணிக்கு குதிரை வாகனம், ஆண்டாள் மாலை சாற்றுதல், 8.30 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி ஆடி வீதியில் புறப்பாடு, 28ம் தேதி காலை 7 மணிக்கு சைத்திய உபசார சேவை, காலை 10.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு நடைபெறுகிறது. 29ம் தேதி காலை 10 மணிக்கு மேல் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி, 30ம் தேதி காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு, மே 1ம் தேதி அர்த்த மண்டபத்தில் சேவையும், 2ம் தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி, திருமஞ்சனம் நடைபெறுகிறது. 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து  கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

எல்இடி திரை மூலம் நேரடி ஒளிபரப்பு

திருவிழாவின் போது சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சுவதும், திரி எடுத்தலுக்கும், தீர்த்தம், அர்ச்சனை, மாலை சாற்றுதல் போன்றவை இந்த வருடம் நடைபெறாது. திருவிழா நிகழ்ச்சிகளை திருக்கோயில் தேரோடும் வீதிகள், கோயில் பஸ் நிலையம், தல்லாகுளம் வெங்கடாசலபதி கோயில் பகுதி, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் பகுதிகளில் எல்இடி டிவி மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா செய்துள்ளனர்.

Related Stories: