பஸ்களை நிறுத்த, தங்க வசதியில்லாததால் பஸ் மேற்கூரையில் தூங்கிய டிரைவர், கண்டக்டர்கள்

திருச்சி: அரசு போக்குவரத்துக்கழக வெளி மண்டலத்தை சேர்ந்த பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்சை நிறுத்த வசதியில்லாததால் திருச்சி மத்திய பஸ் நிலையத்திலேயே நிறுத்திவிட்டு பஸ்சிலேயே கொசுக்கடியில் படுத்துறங்கினர்.

கொரானா 2வது அலை ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலில் உள்ளது. வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஒரு நாள் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு 9 மணிக்கு மேல் எந்த பஸ் சேவையும் கிடையாது. 300 கி.மீ., தொலைவை கடந்து செல்லும் பஸ் சேவைகள் அனைத்தும் மதியம் 3 மணிக்கு மேல் கிடையாது.

பகல் நேரங்களில் பஸ்களில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டாததால் தொலைதூர பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துத்துறை பல்வேறு பஸ் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. அதேவேளை திருச்சி மண்டலத்துக்குட்பட்ட பஸ்கள் நிறுத்தவே பஸ் டிப்போக்களில் போதிய இடம் வசதி இல்லை. இந்நிலையில் காஞ்சிபுரம், வேலூர், மதுரை உள்ளிட்ட வெளி மண்டலகளிலிருந்து வரும் பஸ்கள் நிறுத்துவதற்கு போதிய வசதி இல்லை. இதனால் வெளி மண்டலத்தை சேர்ந்த பஸ் டிரைவர்கள் திருச்சி மத்திய பஸ் நிலையத்திலும், சத்திரம் பஸ் நிலையத்திலும் பஸ்களை நிறுத்தி விட்டு பஸ் மேற்கூரையிலும், பஸ்சுக்குள்ளும் படுத்து கொசுக்கடியில் உறங்கினர்.

இதுகுறித்து டிரைவர்கள் கூறுகையில், ‘இரவு 9 மணிக்கு மேல் பஸ் சேவை இல்லாததால், தொலை தூரம் செல்லும் நாங்கள் திருச்சியிலேயே தங்கி அடுத்தநாள் தான் பஸ் சேவையை தொடர வேண்டி உள்ளது. இரவு பஸ்களை பாதுகாப்பாக நிறுத்த உரிய வசதி செய்து கொடுத்து, டிரைவர், கண்டக்டர் தங்கவும் வசதி செய்து கொடுத்தால் நாங்கள் நிம்மதியாக உறங்க முடியும். சரியான தூக்கமில்லாமல் மனதுக்கும், உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே பஸ் நிறுத்தவும், நாங்கள் தங்கவும் உரிய வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>