இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.!!!

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தொற்று அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சகட்ட தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒருவாரமாக தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது 3 லட்சத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய அரசு இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில் ஒரே நாள் பாதிப்பு 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 ஆக பதிவாகி உள்ளது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பை போலவே பலி எண்ணிக்கை நேற்று 2 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 2,104 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22 லட்சத்து 91 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 84.46 சதவீதமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் 76 சதவீத தினசரி தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா தொற்று அதிகரிப்பதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், பல மாநிலங்களில் கொரோனா ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கிறார்.

மேலும், நாளை காலை 9 மணிக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் நண்பகல் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

Related Stories:

>