சென்னைக்கு எதிராக கொல்கத்தா போராடி தோல்வி: கடைசி வரை கடும் சவால் அளித்ததில் மகிழ்ச்சி; கேப்டன் மோர்கன் பேட்டி

மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 15வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன் குவித்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 64, மொயின் அலி 12 பந்தில் 25 (2 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி 8 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். டூபிளசிஸ் 60 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 95, ஜடேஜா 6 ரன்னில் (ஒரு பந்து) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணியை சென்னையின் தீபக் சாகர் சிதைத்தார். நிதிஷ் ரானா 9, சுப்மான் கில் 0, கேப்டன் மோர்கன் 7,  சுனில் நரேன் 4, ராகுல் திரிபாதி 8 ரன்னில் வெளியேறினர். 31 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், தினேஷ் கார்த்திக், ரஸ்சல், கம்மின்ஸ் அதிரடியில் மிரட்டினர். தினேஷ் 24 பந்தில் 40 ரன், ரஸ்சல் 22 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 54 ரன்னில் ஆட்டம் இழந்தனர். 19.1 ஓவரில் 202 ரன்னுக்கு கொல்கத்தா ஆல்அவுட் ஆனது.

கம்மின்ஸ் 34 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை 3வது வெற்றியுடன் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. சென்னை தரப்பில் தீபக் சாகர் 4, லுங்கி என்ஜிடி 3 விக்கெட் வீழ்த்தினர். டூபிளசிஸ் ஆட்டநாயகன் விருதுபெற்றார். வெற்றிக்கு பின் கேப்டன் டோனி கூறியதாவது: 16வது ஓவரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையேயான போட்டியாகத்தான் ஆட்டம் இருந்தது. நீங்கள் அதிகமாக எதையும் செய்யமுடியாது. வெவ்வேறு விதமான பீல்டுகளை அமைக்க முடியாது.

அவர்களுக்கு கூடுதல் விக்கெட்டுகள் கைவசம் இருந்திருந்தால் ஆட்டம் வேறு விதமாக இருந்திருக்கலாம். கிரிக்கெட்டில் இதுபோன்றவற்றை போதுமான அளவுக்கு பார்த்திருக்கிறோம். நீங்கள் ரன்கள் குவித்துவிட்டீர்கள் என்பதால் எதிரணி அடிக்காது என்பதற்கு எந்த ஒரு நல்ல காரணமும் கிடையாது. நல்ல ரன்களை அடித்துவிட்டோம் என்றாலும் நாம் பொறுப்புடன் விளையாட வேண்டும். அதிக அளவு விக்கெட்டுகளை விரைவாக எடுக்க விரும்பக்கூடாது. ஏனெனில் அதிரடியாக ஆடக்கூடியவர்கள் வந்த பிறகு 200 ரன்கள் என்பதால், அவர்கள் ஆடுவதற்கு ஒரே வழிதான் உள்ளது.

நீங்கள் பெரிய அளவில் எதையும் செய்ய முடியாது. அவர்கள் 20 ஓவர்களும் விளையாடி இருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். ரஸ்சல் அதிரடியாக ஆடியபோது பவுலிங்கில் ஜடேஜா மட்டும்தான் ஒரே ஆப்ஷனாக இருந்தார், என்றார். கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறுகையில், இக்கட்டான நேரத்தில் தினேஷ் கார்த்திக், ரஸ்சல் சிறப்பான பார்ட்னர் ஷிப் அமைத்தனர். கம்மின்ஸ் அணியை வெற்றிபாதையை நோக்கி அழைத்துச்சென்றார். முதல் 5 ஓவரில் விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் விரும்பியது போல் ஆடவில்லை. எங்களுக்கு இது புதிய மைதானம். கடும் சவால் அளித்ததில் மகிழ்ச்சி. ஆட்டத்தை இவ்வளவு நெருக்கமாக முடித்ததில் நான் பெருமைபடுகிறேன் என்றார்.

டோனியின் கீழ் விளையாடுவது அதிர்ஷ்டம்

ஆட்டநாயகன் டூபிளசிஸ் கூறியதாவது: பிட்ச் ரன் அடிக்க சாதகமாக இருந்தது. இதனை முந்தைய ஆட்டத்திலேயே உணர்ந்தேன். கெய்க்வாட் அருமையான இளம் திறமையான வீரர். அவர் தனது நேரத்தையும் நுட்பத்தையும் நம்புவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 15-20 ரன் எடுத்தபின் அவருக்கு பந்து வீசுவது கடினம். இளம் வீரரான அவர் பந்தை நீண்ட தூரம் அடிக்க முடியும். டோனியின் கீழ் நீண்ட நேர காலம் விளையாடுவது அவரின் அதிர்ஷ்டம், என்றார்.

மோர்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா போராடி தோற்ற நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 20 ஓவர்களை வீசி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக எடுத்துக்கொண்டதால் கொல்கத்தா கேப்டன் மோர்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  ஐபிஎல் விதிபடி முதன்முறையாக இந்த தவறை செய்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை செய்தால் 24 லட்சம், சக வீரர்களுகு–்கு 6 லட்சமும், 3வது முறை செய்தால்  கேப்டனுக்கு 30 லட்சம் அபராதம், ஒரு போட்டியில் ஆட தடை மற்றும் சக வீரர்களுக்கு தலா 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Related Stories: