மத்திய அரசின் நிலைப்பட்டால் தடுப்பூசிகளின் விலை உயர்ந்துள்ளது: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசின் நிலைப்பாட்டால் தடுப்பூசிகளின் விலை உயர்ந்திருக்கிறது என்று கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில், வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகள், மாநிலங்கள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், 50 சதவீதத்தை வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதன்பின்னர் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு ரூ.400 என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால், தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச் சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டில் பூமியை மீட்போம் என்கிற கோஷத்தோடு உலக பூமி நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இயற்கையைச் சிதைத்தால் விளைவு என்னவாக இருக்கும் என்பதை இக்காலம் மாதிரி காட்டிக்கொண்டிருக்கிறது. தாங்க மாட்டீர்கள் ஜகத்தீரே… இயற்கையைப் பேணி அதன் கொடையால் நாமும் வாழ்வோம், என பதிவு செய்துள்ளார்.

Related Stories:

>