801 வகையான பயன்பாட்டு பொருட்களை அளிக்கும் பனைமரம்: கருப்பட்டியை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை.!!!

நெல்லை: பனங்கருப்பட்டிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என பனைத்தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பனைமரங்கள் மிகுதியாக காணப்படுகின்றன.

பனைமரத்தில் பெறப்படும் பானத்தில் சுண்ணாம்பு சத்தை சேர்க்கும்போது கிடைப்பது பதநீர். போடாவிட்டால் அது கள். கள்ளில் வெறும் 4 சதவீத இயற்கை ஆல்கஹால் மட்டுமே உள்ளது. குடித்தால் உடலுக்கு மிதமிஞ்சிய சுறுசுறுப்பை கொடுக்கும். அதனால்தான் நம் முன்னோர்கள் பதனீர், கள் குடித்து விட்டு நாள் முழுவதும் வயல்வேலைகளை பார்த்து வந்துள்ளனர்.

கள் இறக்க தமிழக அரசு தடை விதித்த 1987ம் ஆண்டுக்கு பிறகே பனைத்தொழில் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன்மூலம் அந்த ஆண்டில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அதன்பிறகு பனையேறிகள் இத்தொழிலில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. பன்னாட்டு குளிர்பானங்கள் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பனைமரத்தொழிலை தொடர யாரும் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனாலேயே இத்தொழில் நலிவடைந்தது.

இருப்பினும், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவில் பனைத்தொழில்கள் நடத்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் சிதம்பரபுரம், மற்றும் ராதாபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதநீரை காய்ச்சி பனக்கருப்பட்டி செய்யப்படுகிறது. இருப்பினும்,

பனக்கருப்பட்டிக்கு போதிய விலை கிடைக்காததால் பனை வெல்ல உற்பத்தியாளர்கள் வேதனையில் உள்ளனர்.இதுகுறித்து பனைத் தொழிலாளர்கள் கூறுகையில், பனையில் இருந்து இயற்கையாக கிடைக்கும் கருப்பட்டியை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பனை வெல்ல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேலோங்கும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவு மற்றும் பயன்பாட்டு பொருட்கள், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மன், பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன்மூலம் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி வரை அந்நியச்செலாவணி கிடைக்கிறது. இதன் பயன்பாட்டை அதிகரிக்கும்போது ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை அந்நிய செலவாணியை எட்டலாம் என பனைமர ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடேங்கப்பா...801 அயிட்டமா...

பனைமரத்தில் இருந்து பதநீர், இருமல் மற்றும் சளி உபாதைகளை நீக்கும் பனங்கற்கண்டு இப்படி பல சத்தான உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன.

உணவு : பனம்பழம், பனாட்டு, நுங்கு, பாணிப்பனாட்டு, பனங்காய், பனங்கள்ளு, வினாகிரி, பதநீர், பனங்கருப்பட்டி, பனைவெல்லம், சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சீனி , பனங்கிழங்கு, ஒடியல், ஒடியல் புட்டு, ஒடியல் கூழ், பனை குருத்து, பனங்கிழங்கு மாவு,  பனங்கிழங்கு சத்துமாவு, பனம்பழம் ஜுஸ்.

பயன்பாட்டு பொருட்கள் : நீற்றுப் பெட்டி, கடகம், பனைப்பாய், கூரை, வேலி, பின்னல், பனையோலைப் பெட்டி, கிணற்றுப் பட்டை, எரு. துலா, பனம் மட்டை. தட்டிகள் , கங்குமட்டை, விறகு, தண்டு , பனம்விதை, எபொருள். இப்படி பனைமரத்தில் மட்டும் 801 வகையான உணவு மற்றும் பயன்பாட்டு பொருட்கள் கிடைக்கின்றன. வேறு எந்த மரமும் தன்னை ‘பெருங்கொடையாக’ மனிதனுக்கு வழங்குவதில்லை.

Related Stories: