கூட்டம் கூடுவதை தவிருங்கள்; முகக்கவசம் கட்டாயம் அணியுங்கள்!: அவசியமின்றி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை...காவல் ஆணையர் எச்சரிக்கை..!!

சென்னை: கொரோனா ஊரடங்கு நேரங்களில் அவசியமின்றி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை அமைந்தகரையில், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்டோருக்கு முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட உபகரணங்களையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஊரடங்கு நேரங்களில் அவசியமின்றி வெளியே வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தொடர்ந்து, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றினால் தொற்றில் இருந்து மக்கள் தப்பிக்கலாம் என கூறினார். கொரோனா அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அறிகுறிகள் இருந்து பரிசோதனை செய்யாமல் சுற்றித்திரிந்தால் மற்றவர்களுக்கு தொற்று பரவக்கூடும் எனவும் குறிப்பிட்டார். மேலும், சென்னையில் 200 இடங்களில் கொரோனா தடுப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

Related Stories:

>