போளூர் அருகே தாசில்தார் அதிரடி மலைபோல் குவித்து மணல் பதுக்கிய 10 ஏக்கர் பரப்பளவு கிடங்குக்கு `சீல்’

* 5 பேர் கைது; 5 வாகனங்கள் பறிமுதல்

* எம்சான்ட் தூவி மறைத்து நூதனம்

போளூர்:  போளூர் அருகே மலைபோல் குவித்து மணல் பதுக்கிய ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது. 5 பேர்  கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கரிக்காத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. ரியல் எஸ்டேட் அதிபர். பல்வேறு ஊர்களில்  வீடுகளை கட்டி விற்பனை செய்தும் வருகிறார். கோவிந்தசாமி தனது வீடு கட்டும் பணிகளுக்காக, செய்யாற்றின் கரையோரங்களில் உள்ள நிலங்களை விலைக்கு வாங்கி, அந்த நிலத்தை தோண்டி  மணலை எடுத்து வந்து பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், முருகாபாடி கிராமம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் இவருக்கு சொந்தமான கிடங்கு  ஒன்றும் உள்ளது.

பல்வேறு இடங்களில் இருந்து கடத்தி வரப்படும் மணல், மொரம்பு போன்றவை அந்த கிடங்கில் மலைபோல் கொட்டி வைத்து, பின்னர் மணல் லோடு  ஏற்றி, அது தெரியாமல் இருக்க அதன் மீது லேசாக எம்சான்ட் தூவி விடுவார்களாம். இதுபோன்று கடத்தல் தொழிலை கனகச்சிதமாக செய்து  வந்துள்ளார்.இதுகுறித்து திருவண்ணாமலை கூடுதல் எஸ்பியின் சிறப்பு படை போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், டெல்டா படை  போலீசார் கோவிந்தசாமிக்கு சொந்தமான கிடங்கில் அதிரடியாக சோதனை நடத்த சென்றனர்.அப்போது, 3 டிராக்டர், ஒரு மினி லாரியில் பொக்லைன் மூலம் மணல் லோடு ஏற்றப்பட்டு, அதன் மீது எம்சான்ட் தூவப்பட்டு அனைத்து  வாகனங்களும் கிடங்கில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அப்போது, டெல்டா படை போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து, மணல் கடத்தியது தொடர்பாக பாக்மார்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம்(38), கரிக்காத்தூர் பாலாஜி(29), அரவிந்தன்(19),  ராஜேந்திரன்(45), ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ரமணா(32) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும், பொக்லைன் உட்பட 5 வாகனங்களையும்  பறிமுதல் செய்து போளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

தகவலறிந்த போளூர் தாசில்தார் மு.சாப்ஜான் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோவிந்தசாமிக்கு சொந்தமான கிடங்கை பார்வையிட்டு அதற்கு  சீல் வைத்தார். மேலும், முருகாபாடி கிராம நிர்வாக அதிகாரி சேகர் அளித்த புகாரின்பேரில் போளூர் போலீசார் வழக்குப்பதிந்து ரியல் எஸ்டேட் அதிபர்  கோவிந்தசாமியிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: