மத்தூர் அருகே நள்ளிரவு வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆடு திருட்டு விடிய விடிய தேடி கசாப்பு கடையில் சிக்கியது: 2 பேரை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

போச்சம்பள்ளி:  மத்தூர் அருகே, நள்ளிரவு வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆட்டை  திருடிச்சென்றவர்களை விடிய விடிய தேடி, காலையில் கசாப்பு  கடையில் வெட்டிய நிலையில் ஆட்டை இறைச்சியாக மீட்டனர். திருட்டில் ஈடுபட்ட வாலிபர், கடைக்காரரை பிடித்த பொதுமக்கள், போலீசில்  ஒப்படைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த சைதாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் நேர்த்திக்கடனுக்காக இரண்டு ஆடுகளை வாங்கி,  வீட்டில் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்கம் ஆடுகளை கட்டி விட்டு வீட்டினுள் தூங்கியுள்ளார்.  நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆடுகள் சத்தம்போட்டது. விழித்து எழுந்த சங்கர், வெளியே வந்து பார்த் போது, இருசக்கர  வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஒரு ஆட்டை வாகனத்தில் தூக்கிச்சென்றனர்.இதைக்கண்ட சங்கர், திருடன் திருடன் என கத்திக்கொண்டே ஒரு கி.மீ  தூரத்துக்கு அவர்களை துரத்திச்சென்றார். ஆனால் அவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டி தப்பிச்சென்றுவிட்டனர்.

சங்கரின் சத்தம் கேட்டு விழித்த  அக்கம்பக்கத்து வீட்டினர் மற்றும் உறவினர்கள், நடந்தது குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சுமார் 50க்கும் மேற்பட்டோர், தங்களது  இருசக்கர வாகனத்தில் நாலாப்புறமும் சென்று, ஆட்டை திருடிச்சென்றவர்களை தேடியுள்ளனர். அப்போது ஒரு தரப்பினர் மத்தூரில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளுக்கும் சென்று ஆடு அங்கு உள்ளதா என பார்த்துள்ளனர். அப்போது செல்வம்  என்பவரது இறைச்சிக்கடையில் புதியதாக வெட்டப்பட்ட ஆட்டின் தலையை பார்த்தபோது, அது சங்கர் வளர்த்துவந்த ஆடு என தெரியவந்தது.  இதையடுத்து கடைகாரர் செல்வத்திடம், இந்த ஆட்டை யாரிடம் இருந்து வாங்கினீர்கள் என கேட்டுள்ளனர்.அவர் அங்கிருந்த சரவணன் என்பவரை  சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தப்பியோட முயற்சித்துள்ளார். அவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, வெட்டப்பட்ட ஆட்டினை எடுத்துக்கொண்டு அருகே  உள்ள மத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று, சரவணனை ஒப்படைத்து புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், சரவணன் மற்றும் இறைச்சி  கடைகாரர் சங்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். சைதாப்பேட்டை கிராமத்தில், கடந்த 6 மாதத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆடுகள்  திருடப்பட்டு உள்ளது. ஆடு காணாமல் போனது குறித்து புகார் அளித்தால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தற்போது ஆட்டை திருடியவர், அதை  வாங்கியவர் என இருவரையும் பிடித்துவந்து போலீசாரிடம் ஒப்படைத்து விட்டோம். ஆடு திருட்டில் ஈடுபட்ட மற்றவர்களையும் கைது செய்ய  வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>