வழிப்பறி பணத்தில் ரூ.3.50 லட்சம் பைக் காதலிக்கு ‘காஸ்ட்லி’ பரிசு நண்பர்களுடன் மது விருந்து : காரைக்குடியை கலக்கிய திருடன் கைது

காரைக்குடி: காரைக்குடியில் வழிப்பறி செய்த பணத்தில் விலையுயர்ந்த பைக் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த திருடன் சிக்கினான்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் நல்லம்மை (35). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் நேற்று மானகிரியில் இருந்து டூவீலரில் வந்து  கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த வாலிபர், இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து  அவர் காரைக்குடி போலீசில் புகார் அளித்தார். செயினை பறித்த வாலிபர் விலையுயர்ந்த பைக்கில் வந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து  டிஎஸ்பி அருண் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில் கொரட்டி பகுதியை சேர்ந்த கலைதாஸ் (25) நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் 12 பவுன்  நகைகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், காரைக்குடியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது  கண்டுபிடிக்கப்பட்டது.போலீசார் கூறுகையில், ‘‘டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வெளிநாட்டில் வேலை பார்த்த கலைதாஸ், 3 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார்.  வேலையில்லாமல் சுற்றி வந்த அவர் பணத்தேவைக்காக தனது உறவினர் டூவீலரை எடுத்துச் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டார்.

அந்த நகையை  விற்பனை செய்து ரூ.3.50 லட்சத்தில் விலை உயர்ந்த பைக் வாங்கியுள்ளார். மேலும் வழிப்பறியில் கிடைக்கும் பணத்தை வைத்து நண்பர்களுக்கு மது  விருந்து, தனது காதலிக்கு விலையுயர்ந்த பரிசு பொருள் என வாங்கி கொடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்’’ என தெரிவித்தனர்.சம்பவம் நடந்த ஒரே நாளில் திருடனை கைது செய்த போலீசார் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: