வீட்டிற்கு செல்லும் பாதையை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் ராணுவ வீரர் தர்ணா போராட்டம்: அரியலூரில் பரபரப்பு

அரியலூர்: வீட்டிற்கு செல்லும் பாதையை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ராணுவ வீரர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை  ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (40). இந்திய ராணுவத்தில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில்  ஹவில்தாராக ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வரும் இவர், கடந்த 2007ம் ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு 3சென்ட் வீட்டுடன்  கூடிய இடத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் இளவரசன் வீட்டிற்கு செல்லும் 15 அடி பொதுபாதையில் வருவாய்த்துறையில் பணிபுரியும் குமார்  என்பவர் தன்னுடயை‌ நிலம் என்று சுவர் வைத்துள்ளார். இதனால் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் மாவட்ட கலெக்டரிடம் இளவரசனின்  தாய் சரஸ்வதி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தாயின் மனு மீது நடவடிக்கை எடுக்காததால் விடுமுறை வாங்கி ஊருக்கு வந்த ராணுவ வீரர் இளவரசன் அரியலூர் மாவட்ட கலெக்டர்  அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வீட்டின் முன்புள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை வேண்டும் என  கோரிக்கை வைத்தார். தகவல் அறிந்த வந்த அரியலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நாட்டுக்காக பணியாற்றும் ராணுவவீரரின்  குடும்பத்தினரின் மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், பொதுமக்கள் மனுவிற்கு எந்த வகையில் தீர்வு கிடைக்கும் என போலீசாரிடம்  ராணுவவீரர் கேள்வி எழுப்பினார். நீண்ட நேரத்திற்கு பின் துணைஆட்சியரிடம் மனுவை கொடுத்துவிட்டு சென்றார். வீட்டு முன் பாதையை  மீட்டுத்தரக்கோரி ராணுவவீரர் சீருடையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: