இரவு நேர ஊரடங்கால் முன் கூட்டியே பஸ்கள் நிறுத்தம் பேருந்து நிலையங்களில் விடிய விடிய காத்திருந்த மக்கள்

திருச்சி: இரவு நேர தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கின் முதல் நாள், நேற்று அதிகாலை 4 மணியோடு நிறைவு பெற்றது.  இரவில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் டெல்டா மாவட்டத்தில் மக்கள் ஊர்களுக்கு செல்லமுடியாமல் பஸ்நிலையங்களிலே விடிய விடிய காத்திருந்தனர்.தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருதால், நேற்றுமுன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் இரவு 10  மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் பணிகளும் (அத்தியாவசிய தேவைகள் தவிர) தடை  விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு  அனுமதி இல்லை. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரத்தில், அவசர  மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்க்குகளும் இயங்கின.

இரவு ஊரடங்கை முன்னிட்டு டெல்டா மாவட்டத்தில் கடைகள் இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டன. பொதுமக்கள் பெரும்பாலும் 9 மணிக்கே தங்கள்  வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர். இதனால் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. போலீசார் சோதனை சாவடிகள்  அமைத்து தீவிர கண்காணிப்பில் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தேவை இல்லாமல் வெளியில் சுற்றியவர்களை முதல் நாள் என்பதால் எச்சரித்து  அனுப்பினர். டெல்டா மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள்  வெறிச்சோடின. கடைகள் அடைக்கப்பட்டன.

நாகை மாவட்டம் நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கே சாலையோர கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டன. மாலை 5.30 மணியுடன் திருச்சி உள்பட  நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கால் வேலைக்கு சென்ற மக்கள், வெளியூர் சென்றவர்கள் மாலையே வீடு திரும்பினர்.  இதனால் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று காலை வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. ஆனால் மக்களின் வருகை குறைவாக காணப்பட்டது.  பெரும்பாலான பஸ்களில் பயணிகள் குறைவாக இருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியிலிருந்து வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் முழுவதுமாக மூடப்பட்டன.  9.30 மணிக்கு அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டு பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில தனியார் பேருந்துகள் பேருந்து  நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் இரவு 10 மணிக்கு பிறகும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தது. போலீசார் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை  விடுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடைவீதி மற்றும் பல்வேறு பகுதிகளில் நிற்பவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர்.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு 8.50 மணிக்கே மளிகை, ஓட்டல், மார்க்கெட், கடைவீதிகளில் கடைகள் அனைத்தும்  அடைக்கப்பட்டது. இதனால் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மதுபான கடைகள் இரவு 9 மணிக்கு மூடப்பட்டது. நகர் முழுவதும் விடிய  விடிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை வழக்கம்போல் போக்குவரத்து இயங்கியது.

தஞ்சை மாவட்டம்

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் நீண்ட தூரம் செல்லும்  தொழிலாளர்களுக்கு வசதியாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் பஸ்நிலையம், அண்ணாசாலை உள்பட  அனைத்து சாலைகளும் வெறிச்சோடின.

கரூர் மாவட்டம்

கரூரில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கரூர் நகரில் 100க்கும் மேற்பட்ட போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  வழக்கம்போல் நேற்று காலை அனைத்து பஸ்களும் இயங்கின.

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 9 மணிக்கே கடைகள் அடைக்கப்பட்டதாலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும் 8 மணிக்கே பஸ்நிலையம், வீதிகள்  வெறிச்சோடி காணப்பட்டது.

அரியலூர் மாவட்டம்

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் சாலை வீதிகள் வெறிச்சோடின. நேற்று அதிகாலை முதல் இயல்பு  வாழ்க்கை திரும்பியது.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டது. இரவு 9 மணியுடன் அனைத்து  ஓட்டல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டன. பஸ்நிலையத்தில் வெளியூர் செல்லமுடியாமல் 10க்கும் மேற்பட்டோர் தவித்தனர்.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டத்திலும் நேற்றுமுன்தினம் இரவு நகைகள், ஜவுளி கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் 9 மணிக்கு  அடைக்கப்பட்டன. நெடுந்தூர பஸ்கள் டெப்போக்களில் நிறுத்தப்பட்டன. டவுன் பஸ்களும் இரவு 10 மணியுடன் நிறுத்தப்பட்டது. இரவு நேர ஊரடங்கு  தெரியாமல் வெளியூர் செல்ல மத்திய பஸ்நிலையத்தில் வந்து காத்திருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்நிலையத்திலே விடிய விடிய  படுத்திருந்தனர். கொசுக்கடி மற்றும் புழுக்கத்தால் அவதிப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் இரவை கழிக்க செல்போன்களில் பொழுதை  கழித்தனர். அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  வாகனங்களில் சாலைகளில் திரிந்தோரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். நேற்று காலை வழக்கம்போல் பஸ்கள், வாகனங்கள் இயங்கின.

போக்குவரத்து முடக்கத்தால் காய்கறி, பழங்கள் தேக்கம்

தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு வாழை இலை, காய்கறிகள், பூக்கள், பழங்கள் தினமும் வேன்  மூலமும், ஆம்னிபஸ் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன. விவசாயிகளை பொருத்தவரை பகல் நேரங்களில் பூக்கள், இலை காய்கறிகளை  பழங்கள் அறுவடை செய்து இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் பெருநகரங்களுக்கு அனுப்புவது வழக்கம். பகலில் தான் அனுப்ப வேண்டுமென்றால்  இரவு நேரங்களில் அறுவடை செய்ய இயலாது.தற்போது இரவு ஊடரங்கு அறிவித்த நிலையில், வாகன போக்குவரத்து இரவில் தடைபட்டதன் காரணமாக அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூக்கள்,  காய்கறிகள், வாழை இலை, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க மறுக்கிறார்கள். இதனால் பெருமளவில் காய்கறிகள் பழங்கள்  வாழை இலை போன்ற அத்தியாவசிய விலை பொருட்கள் மறுபடியும் வயலில் வீணாகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

விவசாயிகளுக்கு இயற்கையாக பல நஷ்டங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது செயற்கையாக மேலும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. காய்கறிகள்,  வாழை இலை, பழங்கள் போன்றவற்றிற்கு இரவில் அனுமதி அளித்து விளைவித்த பொருளை வீணடிக்காமல் நகரங்களுக்கு செல்ல அனுமதிக்க  வேண்டும். அல்லது அரசு பேருந்துகளில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் எடுத்துவிட்டு காய்கறிகள் மற்றும் வாழை இலை பழங்கள் எடுத்து  செல்ல குளிரூட்டப்பட்ட வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: