சுற்றுலா பயணிகள் வர தடை வாழ்வாதாரத்தை இழந்த நடைபாதை வியாபாரிகள்

ஊட்டி:  ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,  படகு இல்லம், ெதாட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சாலையோர கடைகளில்  ஏதேனும் பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். இதனால், இந்த நடைபாதை ஓரங்களில் கடலை, பூக்கள், சோளம், பழங்கள் மற்றும் பொம்மைகள் போன்ற பொருட்களும், சில கைவினை  பொருட்களையும் சில பெண்கள் விற்பனை செய்கின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாள்  முழுக்க அமர்ந்து விற்பனை செய்தாலும், அதிகபட்சமாக ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

  இதில் குறிப்பாக, எவர்லாஸ்ட் மலர்கள் விற்பனை செய்பவர்கள், கேரட் மற்றும் கடலை விற்பனை செய்பவர்களுக்கு மிகவும் குறைந்த அளவிலான  வருவாய் மட்டுமே கிடைக்கும். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் போது, விற்பனையும்  அதிகரிக்கும். வருவாயும் சற்று அதிகமாக கிடைக்கும். இந்நிலையில், கொரோனா 2வது அலை மீண்டும் மக்களை வாட்ட துவங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள்  வர தடை விதிக்கப்பட்டு, சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால், தாவரவியல் பூங்கா மற்றும் இதர சுற்றுலா தலங்களில் சிறிய கடை வைத்துள்ள பூ வியாபாரிகள் மற்றும் பழ வியாபாரிகள் பாதித்துள்ளனர்.  வாங்கிய சரக்குகளை விற்பனை செய்ய முடியாமல், பழங்கள் மற்றும் பூக்குள் அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, மீண்டும் கடன்காரர்களாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பூ விற்பனை செய்யும் லட்சுமி அம்மாள் கூறியதாவது: நாங்கள் அன்றாடம் எவர்லாஸ்ட்  மலர்களை விற்பனை செய்தால், குறைந்தது ரூ.300 வரை மட்டுமே வருவாய் கிடைக்கும். இதனை வைத்தே பல ஆண்டுகளாக வாழ்க்கையை ஓட்டி  வருகிறோம். மேலும், இந்த வருவாயை வைத்து அன்றாட உணவு, மருந்து மாத்திரை செலவுகள் உட்பட பல்வேறு செலவுகளையும் பார்க்க வேண்டும்.

தற்போது, சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருவாயும் கிடைக்காமல் நாங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளோம்.  மேலும், நாங்கள் வாங்கி வைத்துள்ள பூக்கள் மற்றும் பழங்களை பாதுகாத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்.

  இது தொடர்பாக பழ வியாபாரி லாரன்ஸ் கூறுகையில், ரூ.50 ஆயிரம் மத்திலான பழங்களை வாங்கி வைத்துள்ளேன். சுற்றுலா பயணிகள் வந்தால், மட்டுமே இதனை விற்பனை செய்ய முடியும். இல்லையேல் இவைகள் அனைத்தும் அழுகி விடும். இதனால், பல  ஆயிரம் நஷ்டம் ஏற்படுவது மட்டுமின்றி, கடன் சுமையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 50 சதவீத சுற்றுலா பயணிகள் வர அரசு  அனுமதிக்க வேண்டும், என்றார்.

Related Stories: