×

கண்ணீரால் இணைந்த நட்பு!

நன்றி குங்குமம் தோழி

‘‘கோமதி தங்கப் பதக்கம் ஜெயிச்சதும் எனக்கு தான் முதலில் ஃபோன் பண்ணான்னு நினைக்கிறேன். அவ அழுதுட்டே, “இதுக்கெல்லாம் காரணம் நீ தான் அக்கா” என்று அவள் விசும்பிக் கொண்டு பேசும் போதே எனக்கும் அழுகை வந்து, “அப்படிச் சொல்லாத உன்னோட கடின உழைப்பும், நம்பிக்கையும் தான் இதற்கு காரணம்” என்றேன்.

‘‘கோமதி எனக்கு சக போட்டியாளரா 2009ல் அறிமுகமானா. பொதுவாக போட்டியாளர்கள் மைதானத்திற்கு வெளியேயும், உள்ளேயும் நல்ல நட்புடன் இருப்பாங்க. அந்த போட்டியில் கலந்துகொள்ள வந்த கோமதி, யாருடனும் அதிகமா பேசாம அமைதியாகவும், வெகுளியாகவும் இருந்தா. ஆனால், கடுமையான உழைப்பையும், ஒழுக்கத்தையும் அவள் கடைப்பிடிப்பது எனக்கு இன்று வரை பிடிக்கும்.

தேர்வுக்குழுவிடம் முறையாக கேட்டுப்பெற வேண்டிய உரிமைகளைக்கூட கேட்க மாட்டா. நான் கண்டிப்பேன், ‘உன் உரிமைகளை நீதான் கேட்டு வாங்கணும்’ன்னு சொல்வேன். அவ சோர்வடையும் போது, உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பேன். அந்த அக்கறைதான் எங்களுக்குள் நல்ல நட்பை உருவாக்கியிருக்கிறது” என்கிறார் ஃபிரான்ஸிஸ் மேரி.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பக்கம் கடகம் பட்டி என்ற கிராமம் தான் மேரியின் சொந்த ஊர். கூலி வேலை பார்த்தாலும், தங்களது வறுமையை அவர்களிடத்தில் காட்டாமல், குழந்தைகள் என்ன நினைத்தார்களோ அதை அடைய, அவர்களால் முடிந்த அளவு வழி காட்டியுள்ளனர் மேரியின் பெற்றோர்.

மேரிக்கு, அவரின் அப்பா அடிக்கடி சொல்வது, “நீ என்ன நினைக்கிறாயோ அதில் முழு கவனம் செலுத்து. செய்யும் காரியங்களில் முதலிடமா இருக்கணும். என்ன வேலை செய்தாலும் பாராட்டு கிடைக்கணும். பொய் சொல்லக் கூடாது. மற்றவர்களுக்கு உதவுவதில் முன்னுதாரணமா இருக்கணும்.

உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை நம் மனதில்தான் இருக்கிறது. தோல்வியடைந்தவர்கள் ஆயிரம் காரணம் சொல்வாங்க, வெற்றி பெற்றவர்களுக்கு அதெல்லாம் தோணாது. மற்றவங்க அறிவுரை சொல்லும் போது கேட்க வேண்டும். அதில் நமக்கு தெரியாத விஷயம் இருக்கும்’’ என்று அவர் சொன்ன இந்த வார்த்தைகள்தான் மேரிக்கு உற்சாக டானிக்.

கிராமத்தில் வளர்ந்தவர் என்பதால் மேரி எல்லா வேலைகளையும் செய்துள்ளார். “சின்ன வயசில் கடைக்கு பால் ஊற்றுவதற்காக அப்பா 4 மணிக்கே எழுப்பி விட்டுருவார். அப்பாவோட ஆசை நான் பி.டி.உஷா மாதிரி ஆகணும். அவங்கள பார்த்தது கிடையாது. ஓட்டப் பந்தய வீராங்கனைன்னு பலர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்.

அதனாலேயே பள்ளி மற்றும் சர்ச்சில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள ஆரம்பிச்சேன். அவங்கள மாதிரி ஆகவேண்டும் என்கிற நினைப்பு மட்டும் எந்நேரமும் என் மனதில் ஓட்டமாகவே இருந்தது.

நாங்க இருப்பதோ கிராமம். அதனால் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனையா ஆகவேண்டும் என்றால் என்ன செய்யணும்ன்னு போதிய விழிப்புணர்வும், வழிகாட்டுதலும் இல்லை. அதனால் நானே அதற்கான தேடலில் இறங்கினேன். அதற்கு முதலில் நான் என்னை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பிச்சேன்.

பள்ளியில் எல்லா விளையாட்டு போட்டிகளிலும் பங்கு பெற ஆரம்பிச்சேன். பரிசும் பெற்றேன். எனக்கான ஒரு அடையாளம் கிடைச்சது.நாம் ஒன்றை பற்றி தீவிரமாக நினைக்கும் போது அது சம்பந்தமான ஆட்கள் நம்மை சுற்றி தானே அமைந்திடுவாங்க. அப்படித்தான் நான் படிச்ச ஸ்கூல் பி.இ.டி சார் எனக்கு உதவ முன் வந்தார்.

காரணம் நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. சிலர் தன்னை எப்படி நிரூப்பிப்பது என்பது தெரியாமல் இருக்காங்க. அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இலக்கு, அதற்கான தேடல்’’ என்றவர் தன்னுடைய அடுத்த இலக்கு நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்.
‘‘போட்டியில் ஜெயிச்சு பரிசுகள் குவிந்ததும் எனக்கான ஒரு அங்கீகாரம் கிடைச்சது.

பி.இ.டி.சார் எனக்கு உயர்கல்விக்கு வழிகாட்டினார். அங்கு நானும், சாந்தியும் (ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றவர்) கிளாஸ்மெட். நாங்க இருவருமே விளையாட்டு துறையில் இருந்ததால், நெருங்கிய தோழிகளானோம். எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி எப்போதுமே இருக்கும். எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்று கடுமையாக உழைத்தோம். ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்ட சின்னச் சின்ன மோட்டிவேஷன் பெரிய வெற்றியைக் கொடுத்தது. உழைப்புக்கான பலன் கண்டிப்பா இருக்கும்” என்று கூறும் மேரி, ஹாக்கியிலும் கெட்டிக்காரராக இருந்திருக்கிறார்.

‘‘எங்களின் திறமையை பார்த்த பயிற்சியாளர் எங்களை தடகளப் போட்டிகளுக்கான பயிற்சி எடுக்க சொன்னார். காரணம் ஹாக்கியை பொறுத்தவரை ரெக்கமண்டேஷன் இருந்தா மட்டுமே வெளியில் தெரிவீங்க. தடகளத்தில் பயிற்சி எடுத்தா டாப்பா வருவீங்க”ன்னு அட்வைஸ் செய்தார். அவரின் அட்வைஸ் எங்களுக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தியது. அதன் பிறகு கிராஸ் கன்ட்ரி, பிரைஸ் மணின்னு ஓடிக் கடந்தோம்.

இதற்கிடையில் எங்கள் இருவருக்கும் சென்னையில் டாக்டர்.பி.நாகராஜன் சாரிடம் பயிற்சி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குதான் எங்களுக்கான இலக்கு இன்னும் தெளிவானது. அப்ப எனக்கு 20 வயசு. குடும்பத்தின் மூத்த பிள்ளை. வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கணும், அம்மா, அப்பாக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோணுச்சு. அதனால் விளையாட்டை விட்டுட்டு வேலைக்கு போக முடிவு செய்தேன்.

2003 ஆம் ஆண்டு போலீஸ் டிரெய்னிங் போனேன். அங்கு முருகன்னு ஏட்டு. என் பயோடேட்டாவை பார்த்தவர், “எம்.ஏ முடிச்சிருக்க, நல்ல ஸ்போர்ட்ஸ் பண்ற, நல்ல வேலைக்கு போ’’ என்று சொன்னார். என்னுடைய திறமையைப் பார்த்து சொன்னாலும், அன்று என் வறுமை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து வேலைக்கு முயற்சி செய்துகொண்டே, தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்று பரிசும் குவித்தேன்.

பலர் எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லைன்னு கிண்டல் செய்தாங்க. நான் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தமிழகத்தில் முதல் பெண் டிராஃபிக் எஸ்.ஐ-யாக எனக்கு நியமனம் கிடைச்சது. பேசிய வாய்கள் எல்லாம் அப்போது மூடிக் கொண்டன’’ என்றவர் வேலையில் இருந்தாலும் விளையாட்டினை கைவிடவில்லை.

‘‘வேலை, விளையாட்டுன்னு ஒரு பக்கம் நான் எனக்கான இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தேன். இதனிடையே எனக்கு திருமணம் நிச்சயமாச்சு. குழந்தையும் பிறந்தது. அதை காரணம் காட்டி என்னால் விளையாட்டில் ஈடுபட முடியாதுன்னு சொன்னாங்க. என் வயதை இவர்கள் யார் முடிவு செய்வது.

எப்ப ஸ்போர்ட்ஸை விடணும்ன்னு என்னோட மனசு சொல்லணும். இதற்காகவே தீவிர பயிற்சி எடுத்தேன். என் மகனுக்கு 7 வயதாகும்போது நான் ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற்று தங்கம் வென்றேன். எல்லாம் நல்லபடியா தான் போய்க்கொண்டு இருந்தது.

வாழ்க்கை எப்போதும் நிலையாக இருக்காது என்பதற்கு என் வாழ்வில் ஏற்பட்ட சம்பவம் தான் உதாரணம். சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு விபத்து, என் தடகள கனவை பெரிய அளவில் தொய்வடையச் செய்துவிட்டது.

இப்போது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் என் கடமைகளைச் செய்து வருகிறேன். ஆனாலும் தடகள போட்டிகளில் முழு வீச்சாக பயிற்சி எடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது’’ என்றவரை மற்றொரு விபத்து சம்பவம் தான் இவரையும் கோமதியையும் இணைத்துள்ளது.

“2009 ஆம் ஆண்டு அப்போது தான் நான் கோமதி யை சந்தித்தேன். திருச்சியில் நடைபெற்ற 400 மீட்டர் தடகளப்போட்டியில் பங்கேற்க சென்று இருந்தேன். போட்டியில் பதக்கம் பெற்ற நான், ஒரு பெண் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து விசாரித்தேன். அவள் என்னிடம் “நீங்க வயசானவங்க, கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கு.

நான் சின்ன பிள்ளை, இன்னும் எவ்வளவோ சாதிக்கணும். விசில் சத்தம் சரியா கேட்காததால, மிஸ் பண்ணிட்டேன்” என்றாள் அந்த பெண். அவள் வேறு யாரும் இல்லை இந்தாண்டு தோஹாவில் நடைபெற்ற 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற, தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துதான்.

நான் அவளிடம் போட்டி என்பது வயது சார்ந்தது இல்லை. எல்லாரும் ஜெயிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி தான் ஓடுறோம். உன் வயதிற்கு எனக்கு நீ டஃப் கொடுத்திருக்க முடியும். ஆனால் போட்டி என்று வந்துவிட்டால், யாராக இருந்தாலும் எந்த வயதில் இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் இலக்கை நோக்கி மட்டுமே பயணம் செய்யணும்ன்னு அவளுக்கு நான் கொடுத்த அட்வைஸ் பிடிச்சு போனதோ என்னவோ, அன்று முதல் இன்று வரை, இருவரும் நல்ல தோழியாக இருக்கிறோம்.

என்னால ஒரு பொண்ணு அழுதிருக்கான்னு நினைக்கும் போது ஆதங்கமா தான் இருந்தது. இருந்தாலும் அவ மனசில் ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் எவ்வளவு இருந்திருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு இருவரும் விளையாட்டு குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.

அவள் துவழும் போது எல்லாம் நான் ஊன்றுகோளா இருந்தேன். எந்த விபத்தால் என் கனவு தடைபட்டதோ, அதே போன்றதொரு விபத்தால் கோமதியின் கனவும் என் கண்ணெதிரே தடைப்பட்டதை உணர்ந்தேன். என்னால் அந்த சம்பவத்தை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியவில்லை.

கோமதி நம்பிக்கை இழந்து விடக்கூடாதுன்னு அவளுக்கு ஆறுதலாக நின்றேன். கோமதி பதக்கம் வாங்குவாள் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு எப்போதும் இருந்தது. அவளிடம் ஒரு நாள் நீ கண்டிப்பா சாதனை படைப்பன்னு சொல்லுவேன். என்னுடைய நம்பிக்கையை அவள் நிறைவேற்றி இருப்பதை அவள் சொன்ன போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. கோமதி வென்றுள்ள தங்கம் ஒட்டுமொத்த பெண்களின் நம்பிக்கை’’ என்றார் மேரி அடுத்த இன்னிங்க்ஸ் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராக.

அன்னம் அரசு

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!