குட் நியூஸ்.. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 10 ஆயிரத்தில் 2 - 4 பேருக்கு மட்டுமே கொரோனா : தரவுகளை வெளியிட்டது ஐசிஎம்ஆர்!!

டெல்லி : நாடு முழுவதும் இதுவரை 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களில் 10 ஆயிரத்தில் 2 முதல் 4 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும்  கொரோனா தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கம் அளித்துள்ளது. தடுப்பூசியை முழுவதுமாக செலுத்திக் கொண்டவர்களில் மிகச் சிறிய அளவிலான மக்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

கோவாக்சின் மருந்து முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 93 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேரில் 4208 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கோவாக்சின் 2ம் தவணை தடுப்பூசியை போட்டுக் கொண்ட 11 லட்சத்து 37 ஆயிரத்து 178 பேரில் வெறும் 698 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. அதே நேரம் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட 10 கோடியே 3 லட்சத்து 2 ஆயிரத்து 745 பேரில் 17,145 பேருக்கு தொற்று ஏற்பட்டதாக பதிவாகி உள்ளது.

அதே போல் கோவிஷீல்டு 2ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட 1,57,32,754 பேரில் வெறும் 5,014 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்புக்கு ஆளானதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. தடுப்பூசி தவணைகளை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் மிக சொற்பமான அளவில் மட்டுமே அதாவது 0.4% மட்டும் கொரோனா தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு மிகவும் குறைவான அளவு என்பதால் யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. 

Related Stories: