கோவையில் ரூ.1.80 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

கோவை: கோவையில் ரூ.1.80 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் உதயம்பூர் சுற்றுவட்டாரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக அம்மாநில தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச் 28ஆம் தேதி சந்தேகத்திற்குரிய இடத்தில் கேரள போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோவையை சேர்ந்த பிரியன்லால் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 95,000 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பிடிப்பட்டவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

இதன் அடிப்படையில் நேற்று இரவு கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கோவை உக்கடம் அல்அமீன் காலனியில் உள்ள அஷ்ரப் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிலிருந்து ரூ.8,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கட்டுபிடிக்கப்பட்டது. அஷ்ரப் கொடுத்த தகவலின் பேரில் கரும்பு கடையை சேர்ந்த சையது சுல்தான் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்திய கேரள போலீசார் அங்கிருந்து ரூ.1.80 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். அஷ்ரப், சுல்தான் இருவரையும் கைது செய்த கேரள போலீசார் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவிட்டு கேரளா அழைத்து சென்றனர்.

Related Stories: