சிஎஸ்கே போராடி வெற்றி

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ருதுராஜ் கெயிக்வாட், டு பிளெஸ்ஸி சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்தது. ருதுராஜ் 33 பந்திலும், டு பிளெஸ்ஸி 35 பந்திலும் அரை சதம் அடித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 115 ரன் சேர்த்த நிலையில், ருதுராஜ் 64 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி தன் பங்குக்கு 12 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 25 ரன் விளாசி நரைன் சுழலில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் தோனி 17 ரன் எடுத்து (8 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ரஸ்ஸல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது. டு பிளெஸ்ஸி 95 ரன் (60 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 6 ரன்னுடன் (1 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் 5 ஓவரில் 31 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

ஆனாலும் தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல் ஜோடி அதிரடியாக ஆடி 6வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது.

தினேஷ் கார்த்திக் 40 ரன்னிலும் (24 பந்து), மரண அடியுடன் அரைசதம் அடித்த ரஸ்ஸல் 54 ரன்னிலும் (22 பந்து, 6 சிக்சர், 3 பவுண்டரி) ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் சூறாவளியாக ஆடினார். கரண் வீசிய 16வது ஓவரில் ஹாட்ரிக் உட்பட 4 சிக்சர், ஒரு பவுண்டரி என 30 ரன் விளாசினார். 23 ரன்னில் கம்மின்ஸ் அரைசதம் அடிக்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி ஓவரில் கேகேஆர் வெற்றிக்கு 20 ரன் தேவை என்ற நிலையில் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இதில் முதல் பந்தில் பரிஷத் கிருஷ்ணா ரன் அவுட்டாக, கொல்கத்தா 19.1 ஓவரில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. பேட் கம்மின்ஸ் 66 ரன்னுடன் (34 பந்து, 6 சிக்சர், 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Related Stories: