மத்திய அரசை விளாசிய நீதிபதிகள் ஆக்சிஜன் சிலிண்டருக்காக பிச்சை எடுங்கள், திருடுங்கள்

புதுடெல்லி: டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை நடத்தி வரும் பாலாஜி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யாவிட்டால், எங்கள் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகி விடும்’’ என கூறியது. இந்த வழக்கு அவசர வழக்காக நேற்று விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விபின் சாங்வி, ரேகா பல்லி மத்திய அரசை கடுமையாக சாடினர். ‘‘நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் சாக வேண்டுமென விரும்புகிறீர்களா? துயரமான இந்த சமயத்தில் கூடவா அரசு விழித்துக் கொள்ளாது? மருத்துவமனைகள் ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் போது, ஸ்டீல் ஆலைகள் மட்டும் ஆக்சிஜன் கொண்டு இயங்குவதை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

மனிதாபிமானமே இல்லையா? டெல்லியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிலும் இதே நிலை நீடிக்கிறது. உண்மையிலேயே இது மோசமானது. தொழிற்சாலைகளை பற்றி கவலைப்படும் நீங்கள் மக்கள் சாவதைப் பற்றி கவலைப்பட மாட்டீர்களா? மனித உயிரைக் காட்டிலும் எதுவும் முக்கியமில்லை. எனவே நீங்கள் பிச்சை எடுப்பீர்களோ, கடன் வாங்குவீர்களோ, திருடுவீர்களோ தெரியாது, தேவையான ஆக்சிஜனை உடனே சப்ளை செய்ய வேண்டும்’’ என்றனர். இதையடுத்து, டெல்லிக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

Related Stories: