கத்தியை காட்டி ரகளை செய்த ரவுடி: கல்லால் அடித்து துரத்திய பெண்கள்

பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி.காலனி 15வது தெரு பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (எ) அஜய்(21), இவர் மீது வியாசர்பாடி எம்.கே.பி.நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் சஞ்சய் அவரது நண்பர் ஹரிஹரன்(21) என்பவருடன் சேர்ந்து வியாசர்பாடி 30வது தெரு பகுதியில் கத்தியை வைத்து ரகளையில் ஈடுபட்டார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டினார். இதை கண்ட அங்கிருந்த பெண்கள் ஒன்று கூடி கற்களால் சஞ்சயை சரமாரியாக தாக்கினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்.கே.பி.நகர் போலீசார் சஞ்சயை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சஞ்சய் உடன் வந்த அவரது நண்பர் ஹரிஹரனை பிடித்து பொதுமக்கள் எம்.கே.பி.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>