×

செய்தி துளிகள்

* வழிப்பறி ஆசாமிகள் கைது: கொருக்குப்பேட்டை மோட்சியபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ரத்தினம்மாள்(48). ரயில்வே ஊழியர். நேற்று காலை மாட்டு மந்தை ரயில்வே குடியிருப்பு அருகே நடந்து சென்றபோது பைக்கில் வந்த 4 பேர் வழிமறித்து 3 சவரன் செயினை பறித்து தப்பினர். புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகரை சேர்ந்த திருமூர்த்தி(19), கத்திவாக்கம் நெடுஞ்சாலையை சேர்ந்த பாலாஜி(19), சிகரந்தபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன்(19), ஜெ.ஜெ‌.நகரை சேர்ந்த பாலாஜி(19) ஆகியோரை கைது செய்தனர்.

* ஓட்டேரியை சேர்ந்த மணிவண்ணன்(28), நேற்றிரவு பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதி வழியாக சென்றபோது பைக்கில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ₹2,000த்தை பறித்து சென்றனர். புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் பிரபாகரன்(27), அப்துல் சையத்(29), ஆகாஷ்(21) ஆகியோரை கைது செய்தனர்.

* ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி: காஞ்சிபுரம் மாவட்டம் சாயாகுளம் நகரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(64). அமைந்தகரை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அமைந்தகரையில் சாலையை கடக்க முயன்றார் அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில் அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார்(29) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

* லேத் பட்டறை உரிமையாளர் தற்கொலை: கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் குமாரவேலு(43). லேத் பட்டறை நடத்தி வந்தார். கடந்த ஒராண்டாக குமாரவேலுக்கு சரிவர தொழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் கடன் வாங்கி கம்பெனி, குடும்பத்தையும் நடத்தி வந்துள்ளார். மேலும், அவருக்கு கடன்சுமை நாளுக்கு நாள் அதிகரித்ததால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* மதுபாட்டில்கள் பறிமுதல்: கோயம்பேடு மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் கள்ளச்சந்தையில் வாங்கி வந்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும்  மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் தப்பியோடினர். அங்கு பதுக்கியிருந்த 50 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

* ரவுடி கொலையில் மேலும் இருவர் கைது: திருவிக நகர் பகுதியில் கடந்த 19ம் தேதி இரவு ரவுடி அஜித் (எ) அஜித்குமாரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. ஏற்கனவே இந்த  கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பிரபாகரன் மற்றும் திலீப்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்  சரணடைந்தனர். மேலும், இந்த வழக்கில் திருவிக நகரை சேர்ந்த சரவணன்(26) மற்றும் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்த பிரபாகரனின் தம்பி விஜய்(25) ஆகியோரை நேற்று திருவிக நகர் போலீசார் கைது செய்தனர்.

* தீயில் எரிந்து கார் சேதம்: செம்மஞ்சேரி நூக்கம்பாளையம் பிரதான சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதனை பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை பகுதியை சேர்ந்த பீரித்தி என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, திடீரென காரின் முன் பகுதியில் புகை வந்தது. இதை பார்த்த பீரித்தி உடனடியாக காரை சாலை  ஓரத்தில் நிறுத்தினார். பின்னர் தீ மளமளவென  கார் முழுவதும் பரவி தீப்பற்றி எரிய துவங்கியது. உடனே, காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கீழே இறங்கினர். தகவலின்பேரில் சிறுசேரி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் தீயில் எரிந்து முற்றிலும் எரிந்து நாசமானது.

Tags : Seizure, arrest, rowdy murder
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...