வேங்கைவாசலில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடை மற்றும் வீடுகளை அகற்ற, சேலையூர் போலீசார் உதவியுடன் நேற்று வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கபபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க தொடங்கினர். இதனையடுத்து பொதுமக்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி கடைகள் மற்றும் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் நீதிமன்றத்தில் ஒரு மாத காலம் அவகாசம் தந்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர், ஒரு மாதத்திற்குப் பின்னர் நாங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவதற்குள் பொதுமக்கள் வீடுகள் மற்றும் கடைகளை காலி செய்திருக்க வேண்டும் என தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து வருவாய்த் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, நேற்று காலை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். நோட்டீஸ் வழங்கிய சிறிது நேரத்தில் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்து கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடத் தொடங்கினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால், முன்பே நோட்டீஸ் வழங்கி குறிப்பிட்ட நாட்களுக்கு கால அவகாசம் வழங்கி அதன் பின்னரும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றால் மட்டுமே அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

ஆனால், இங்கு நேர் மாறாக நோட்டீஸ் வழங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே கட்டிடங்களை அகற்ற தொடங்கினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். எனவே, எங்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்று போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர்,’’  என குற்றம்சாட்டினர்.

வீடுகளை இடிக்க நோட்டீஸ்

திருவொற்றியூர் 10வது வார்டுக்குட்பட்ட சடையங்குப்பம் பகுதியில் பெரும்பாலான வீடுகள், சாலை ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனை சென்னை மாநகராட்சி 1வது மண்டல உதவி கமிஷனர் தேவேந்திரன் அறிவுறுத்தல் படி, செயற்பொறியாளர் பால்தங்கதுரை தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக கருதப்படும் 68 வீடுகளுக்கு நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.

Related Stories: