அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் விபத்து அதிகரிப்பு; வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: காஞ்சிபுரம் சாலையில் 28 வயதுள்ள பெண் பல் மருத்துவர் ஒருவர் கடந்த 2013ம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து மோதியது. அதில் பலத்த காயமடைந்த பெண் பல் மருத்துவரின் உடலில் 90 சதவீத ஊனம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மோட்டார் வாகன தீர்ப்பாயம், 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாய் இழப்பீடாக நிர்ணயித்தது. குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டதாக அந்த பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: பூரண நலமுடன் இருந்திருந்தால், அவரது வருமானம் உயர்ந்திருக்கும் என்ற அடிப்படையில், இழப்பீட்டு 1 கோடியே 50 லட்சம் என உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொகையை 2013ம் ஆண்டிலிருந்து 7 சதவீத வட்டியுடன், 12 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். கடந்த 2013ல் 1 லட்சத்து 37 ஆயிரமாக இருந்த வாகன விபத்து எண்ணிக்கை 2019ல் 4 லட்சத்து 67,044ஆக அதிகரித்துள்ளது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 51,417. இந்த விபத்துகளில் சிக்குபவர்களில் 65 சதவீதம்பேர் இளைஞர்கள்.

தேசிய குற்ற ஆவண பதிவேட்டில் ஒவ்வொரு மணி நேரத்திலும் 48 பேர் விபத்தில் பலியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது தான் காரணம். எனவே, கீழ்க்கண்ட உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த நீதிமன்றம் பிறப்பிக்கிறது.

* எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று மத்திய அரசு 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி கட்டாயமாக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வழங்கும்போது பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்குவது எப்படி என்று கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக நிபுணர்கள், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள் மூலம் பாடங்கள் எடுக்க வேண்டும்.

* பள்ளிப் பாடத்திட்டங்களில் சாலை விதிகளையும் சேர்த்து கற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

* வேகத்தை குறைப்பது, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது தொடர்பான, இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

Related Stories:

>