அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி, ஆக்ஸிஜனை தொடர்ந்து ரெம்டெசிவர் மருந்துக்கும் தட்டுப்பாடு

கொரோனா நோயாளிகளை கைவிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. அடுத்து தடுப்பூசி, ஆக்ஸிஜன், `ரெம்டெசிவர்’ மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் தினசரி சுமார் 4 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பரிசோதனை செய்தவர்கள் பெயர் மட்டுமே இந்த பட்டியலில் வருகிறது. சிறிய பாதிப்பு உள்ளவர்கள் பல ஆயிரம் பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்களும் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. 40 வயது கடந்தவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் பலருக்கு நுரையீரல் தொற்றும் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி உள்ளது. புதிய நோயாளிகளை உள்நோயாளிகளாக அனுமதிக்க டாக்டர்கள் மறுத்து வருகிறார்கள். வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றாலும் அங்கும் படுக்கைகள் இல்லை. படுக்கை கிடைத்தாலும், கொரோனா சிகிச்சை என அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழக அரசு, கொரோனா நோயாளிகளிடம் சென்னையில் ஒரு நாளைக்கு ரூ7,500 கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் ரூ15 ஆயிரம் வசூலிக்கலாம். ஆனால், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசு உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டது. கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அடுத்து, கொரோனா நோய் வராமல் இருக்க தடுப்பூசி போடலாம் என்றால் தமிழகத்தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி இல்லை என்று பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இந்த நிலையில்தான், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், அரசு வழக்கம்போல் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று கூறி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு `ரெம்டெசிவர்’ மருந்து ஊசி மூலம் தொடர்ந்து 5 நாட்கள் செலுத்தப்படும். இந்த ஊசி ரூ900 முதல் ரூ1000த்துக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்த மருந்து இந்தியாவிலே தயாரிக்கப்படுவதால் பெரிய அளவில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால் ரெம்டெசிவர் மருந்துக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து இல்லாததால், உறவினர்களிடமே ரெம்டெசிவர் மருந்தை வெளியில் எங்காவது வாங்கி வாருங்கள் என்று கூறப்படுகிறது. இந்த மருந்து கள்ளமார்க்கெட்டில் ரூ6 ஆயிரம் முதல் ரூ10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. காரணம், இந்த மருந்தை மத்திய அரசு அதிகளவில் வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டதால்தான் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி படுக்கை இல்லை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்தும் கிடைக்கவில்லை, தடுப்பூசி இல்லை என புகார்கள் தமிழகத்தில் நீண்டு கொண்டே செல்கிறது.

இதன்மூலம் கொரோனா நோயாளிகளை தமிழக அரசு கைவிட்டு விட்டதாகவே கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் விழுந்து விழுந்து கொரோனா தொற்று பரவாமல் இருக்க பணியாற்றிய ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தற்போது தலைமறைவாகவே உள்ளனர். தமிழகத்தில் முதல்வர், அமைச்சர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், அதில் கவனம் செலுத்தவில்லை. இப்படியே விட்டால் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் இனியாவது கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு `ரெம்டெசிவர்’ மருந்து ஊசி மூலம் தொடர்ந்து 5 நாட்கள் செலுத்தப்படும். இந்த ஊசி ரூ900 முதல் ரூ1000த்துக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்த மருந்து இந்தியாவிலே தயாரிக்கப்படுவதால் பெரிய அளவில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்தது.

Related Stories: