ஒரே நாளில் 2,023 பேர் பலி தினசரி பாதிப்பு 3 லட்சம் ஆனது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியிருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சகட்ட தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒருவாரமாக தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய அரசு நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில் நேற்று ஒரே நாள் பாதிப்பு 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 ஆக பதிவாகி உள்ளது. இதனால் இன்றைய தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடக்கும் என அஞ்சப்படுகிறது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பை போலவே பலி எண்ணிக்கை நேற்று 2 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 2,023 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 85.01 சதவீதமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் 76 சதவீத தினசரி தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,907 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

* ரமேஷ் பொக்ரியாலுக்கு தொற்று  

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 61 வயதான அவர் மருத்துவர்கள் அறிவுரைப்படி மருந்து மற்றும் சிகிச்சை எடுத்து வருவதாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதே போல, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் சசிதரூர் ஆகியோருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Related Stories:

>