விழிப்புணர்வு குறைவு... திட்டமிடல் இல்லாத நிலையில் சென்னையின் பல இடங்களில் 2வது ‘டோஸ்’ கோவேக்‌சின் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு

* மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கிய மக்கள்

* கோவிஷீல்ட் காரணமாக ஈயாடிய அரசு கிளினிக்குகள்

* ஆழ்வார்பேட்டையில் மக்கள் மறியல்

சென்னை: கொரோனாவுக்கான கோவேக்சின் தடுப்பூசியை முதல் முறையாக மற்றும் 2ம் டோஸ் போட விரும்பிய பொதுமக்கள் சென்னையில் நேற்று அலைந்து திரிந்தனர். மண்டல மருத்துவமனையில் தான் கோவேக்சின் கிடைக்கும் என்று ஊரக சுகாதார மையங்கள், மினி கிளினிக் சென்றவர்களை அங்கிருந்த சுகாதார துறையினர் திருப்பி அனுப்பினர். சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு 160 மாநகர சுகாதார மையங்கள் மற்றும் 36 மினி கிளினிக்குகள் என மொத்தம் 196 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு வகையான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் வயது முதிர்ந்தவர்களுக்கு 50 நடமாடும் தடுப்பூசி மையங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று தடுப்பூசி போட தயக்கம்காட்டினர்.

இதையடுத்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதையடுத்து மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திவருகின்றனர். அதன்படி சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட 123வது வார்டு, பீமன்னாபேட்டை பகுதியில் அமைந்துள்ள மாநகர சுகாதார மருத்துவமனையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 5.30 மணியளவில் வேக்சின் போடுவதற்கு காத்திருந்தனர். 10.30 மணிக்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள், “அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாது. எங்களிடம் 100 வேக்சின் தான் இருக்கிறது,” என கூறினர். இதையடுத்து காலையில் இருந்து காத்திருந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு தடுப்பூசி அனுப்பி வைப்பதாக கூறினர். மேலும் 2ம் கட்டமாக கோவேக்சின் தடுப்பூசி போட வந்தவர்கள் மாநகராட்சிக்கு சொந்தமான சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், கிளினிக் என்று ஏறி இறங்கினர். மடிப்பாக்கம் பகுதியில் கோவிஷீல்ட் தான் முதலில் போடப்படும். கோவேக்சின் ஸ்டாக் இல்லை என்று திருப்பி அனுப்பினர். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அரும்பாக்கம் பகுதியில் கோவிஷீல்ட் மட்டுமே இருப்பதாக கூறினர். இதனால் பலர் பைக், ஆட்டோக்களில் எங்கே கோவேக்சின் இருக்கிறது என்று தேடிப்போய் போட்டுக் கொண்டனர்.

கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அனைத்தும் கொரோனாவுக்கானது தான். இரண்டும் ஒன்று தான். எந்த பின்விளைவும் ஏற்படாது என்று அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், கோவிஷீட் மட்டுமே இருக்கிறது வேண்டுமா.. வேண்டாமா என்று பொதுமக்களிடம் சாய்ஸ் கேட்பது தான் பிரச்னைக்கு காரணம். எனவே, சுகாதார ஊழியர்கள் பொதுமக்களிடம் வேக்சின் பற்றி பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related Stories:

>