9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி அசத்தல் வெற்றி கணக்கை தொடங்கியது சன்ரைசர்ஸ்: 5வது இடத்துக்கு முன்னேற்றம்

சென்னை: பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் 14வது சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ரைலி மெரிடித், ஜை ரிச்சர்ட்சன், ஜலஜ் சக்சேனாவுக்கு பதிலாக பேபியன் ஆலன், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், எம்.அஷ்வின் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியிலும் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. முஜீப், சமத், மணிஷ் ஆகியோருக்கு பதிலாக கேன் வில்லியம்சன், கேதார் ஜாதவ், சித்தார்த் கவுல் இடம் பெற்றனர்.

பஞ்சாப் தொடக்க வீரர்களாக ராகுல், அகர்வால் களமிறங்கினர். ராகுல் 4 ரன் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் ஜாதவ் வசம் பிடிபட்டார். அடுத்து அகர்வாலுடன் அதிரடி வீரர் கிறிஸ் கேல் இணைந்தார். சன்ரைசர்ஸ் வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசியதுடன் துடிப்பாக பீல்டிங் செய்து நெருக்கடி கொடுக்க, பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். அகர்வால் 22 ரன் (25 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ரஷித் சுழலில் அகமது வசம் பிடிபட, அடுத்து வந்த பூரன் ஒரு பந்தை கூட சந்திக்காமல் பரிதாபமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். பஞ்சாப் 7.1 ஓவரில் 39 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. கிறிஸ் கேல் 15 ரன் எடுத்து ரஷித் சுழலில் நடையை கட்ட, ஹூடா 13 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 14 ரன், பேபியன் ஆலன் 6, ஷாருக் கான் 22 ரன் (17 பந்து, 2 சிக்சர்), முருகன் அஷ்வின் 9, முகமது ஷமி 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுக்க, பஞ்சாப் கிங்ஸ் 19.4 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அர்ஷ்தீப் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் கலீல் அகமது 3, அபிஷேக் ஷர்மா 2, புவனேஷ்வர், சித்தார்த், ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. கேப்டன் வார்னர், பேர்ஸ்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 10 ஓவரில் 73 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். வார்னர் 37 ரன் எடுத்து (37 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆலன் பந்துவீச்சில் அகர்வால் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, பேர்ஸ்டோ 48 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை வசப்படுத்தியது. பேர்ஸ்டோ 63 ரன் (56 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), வில்லியம்சன் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பேர்ஸ்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2 புள்ளிகள் பெற்ற சன்ரைசர்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியது.

Related Stories:

>