பெங்களூர் - ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று மும்பையில் நடைபெற உள்ள 16வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை  போட்டிகளை முடித்துக் கொண்டு பெங்களூர் அணி மும்பை சென்றுள்ளது. சென்னையில் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடிய உற்சாகத்தில் இன்று ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியில் டி வில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கைல் ஜேமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் தொடர்ந்து 4வது வெற்றி முனைப்புடன் இன்று பெங்களூர் களம் காண்கிறது.

ராஜஸ்தான் அணி அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இதுவரை ஆடிய 3 ஆட்டங்களில் டெல்லியை மட்டும் வீழ்த்தியுள்ளது. மற்றபடி பஞ்சாப், சென்னை அணிகளிடம் தோற்றுள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் முதல் ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 119 ரன் குவித்தார், ஆனால் அடுத்த 2 ஆட்டங்களில் அவசரப்பட்டு விளையாடி 4, 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், சஞ்சு சாம்சன் யாராவது ஒருவர் மட்டுமே ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிரடியாக ஆடுகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறுகின்றனர். பந்து வீச்சில் மட்டும் சேத்தன் சகாரியா, கிறிஸ் மோரிஸ் இருவர் அணி நம்பிக்கை தருகிறது. அந்த நம்பிக்கை  பெங்களூர் அணிக்கு சவாலாக இருக்குமா என்பது இன்றைய போட்டியில் தெரியும்.

* இதுவரை மோதியதில்...

ஐபிஎல் தொடர்களில் பெங்களூர்-ராஜஸ்தான் அணிகள் இதுவரை 23 ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றில் இரு அணிகளும் தலா 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டன. ஒருமுறை மட்டும் இந்த அணிகள் பிளே ஆப் சுற்றில் மோதின. 2015ல் நடந்த அந்த எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் 71 ரன் வித்தியாசத்தில் வென்றது. கடந்த சீசனில் கடந்த 2 லீக் ஆட்டங்களிலும் பெங்களூர்தான் வென்றுள்ளது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில், இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது. அதிகபட்சமாக ராஜஸ்தான் 217 ரன், பெங்களூர் 200 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக பெங்களூர் 70, ராஜஸ்தான் 58 ரன்னில் சுருண்டுள்ளன.

Related Stories:

>