டு பிளெஸ்ஸி, ருதுராஜ் அதிரடி 220 ரன் குவித்தது சிஎஸ்கே

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ருதுராஜ் - டு பிளெஸ்ஸி தொடக்க ஜோடியின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது. வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ருதுராஜ் கெயிக்வாட், டு பிளெஸ்ஸி இருவரும் சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்தது. இவர்களைப் பிரிக்க முடியாமல் நைட் ரைடர்ஸ் பவுலர்கள் விழிபிதுங்கினர்.

ருதுராஜ் 33 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் டு பிளெஸ்ஸி 35 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 115 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். ருதுராஜ் 64 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி, வருண் பந்துவீச்சில் கம்மின்ஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மொயீன் அலி தன் பங்குக்கு 12 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 25 ரன் விளாசி நரைன் சுழலில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். டு பிளெஸ்ஸி - மொயீன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது.

கேப்டன் தோனி 17 ரன் எடுத்து (8 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ரஸ்ஸல் பந்துவீச்சில் மார்கனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்து மிரட்டியது. டு பிளெஸ்ஸி 95 ரன் (60 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 6 ரன்னுடன் (1 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வருண், சுனில், ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. கில், ராணா இருவரும் துரத்தலை தொடங்கினர். கில் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

Related Stories: