கொரோனா நெருக்கடி காலத்திலும் கொள்ளை லாபம் தடுப்பூசியை வைத்து பணத்தை கறப்பதா? தனியாரிடம் தாரை வார்க்கவே செயற்கை தட்டுப்பாடு என குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘கொரோனாவால் மக்கள் கொத்து கொத்தாக பலியாகிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் தடுப்பூசியை வைத்து மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க தயாராகி விட்டன. இதற்கு ஒத்துழைப்பது போல் மத்திய அரசும் தடுப்பூசியை உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வழிவகுத்துள்ளது. இது மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் முயற்சியாகவே இருக்கிற,’ என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்பதுதான் மத்திய அரசின் வாக்குறுதி. ஆனால், இன்று அந்த வாக்குறுதியை மத்திய அரசு காற்றில் பறக்க விட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இலவச தடுப்பூசி என்றும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியாரிடம் காசு கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் தடுப்பூசி விற்பனையை கனஜோராக தொடங்கி வைத்துள்ளது. கொரோனா 2வது அலை கோரதாண்டவமாடி தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி, மோசமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் கொத்து கொத்தாக மக்கள், கொரோனா வைரசுக்கு பலியாகின்றனர். இதிலிருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் என்ற நிலைக்கு மக்கள் அனைவரும் தயாராகி விட்டனர். இந்த நெருக்கடி சூழலை பணம் சம்பாதிக்கும் யுக்தியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள்,  அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாடடி உள்ளனர்.

வெளிநாடுகளுக்கு 6 கோடி தடுப்பூசியை தானம் செய்த இந்தியா, இன்று தடுப்பூசி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைக்கே தீர்வு காணாத நிலையில், வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி விநியோகத்தை முழுமையாக கவனித்து வந்த மத்திய அரசு, நேற்று முதல் அதிலிருந்து விலகி உள்ளது. தற்போது, தனியார் தடுப்பூசி மையங்களுக்கும் மத்திய அரசு மூலமாகவே தடுப்பூசி விநியோகிக்கப்படுகிறது. மே 1ம் தேதி முதல் இது நிறுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மே 1ம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,’ என தெரிவித்துள்ளது. அப்படியெனில், இதற்காகத்தான் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டதா எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வெளிச்சந்தையில் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் நேரடியாக விற்பனை செய்யலாம் எனவும் மத்திய அரசு தாராளம் காட்டி உள்ளது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்டு தடுப்பூசி விலையை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.  

தற்போது, அரசு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் இலவசமாகவும், தனியார் மையங்களில் ஒரு டோஸ் ரூ.250 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சீரம் நிறுவன விலை அறிவிப்பின் மூலம் தனியார் மையங்களில் 2 டோஸ் தடுப்பூசி போட ரூ.1200 வரை செலவழிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை தட்டுப்பாடு ஏற்பட்டால் தனியார் மையங்கள் பல மடங்கு விலையை அதிகரித்து நிர்ணயிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. சேவைக் கட்டணம் என்ற விதத்திலும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநிலங்கள், தனியாருக்கு வேறொரு விலை என்பதை கைவிட வேண்டுமென பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

* இரட்டை உருமாற்ற வகை கோவாக்சின் தடுக்கும்

பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, பிரேசில் வகை வைரஸ்களை தடுக்கும் ஆற்றல் கொண்டதுடன், இந்தியாவில் உருவான இரட்டை உருமாற்ற வகை கொரோனா வைரசையும் தடுக்கும் திறன் படைத்ததாக ஐசிஎம்ஆர் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று வெளியிட்ட கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட இடைக்கால ஆய்வறிக்கையில், மிதமான, சாதாரண மற்றும் தீவிரமான கொரோனா நோயாளிகளிடம் கோவாக்சின் 78 சதவீதம் செயல் திறன் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

* 95 நாளில் 13 கோடி தடுப்பூசி

இந்தியாவில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி, மொத்தம் 13 கோடியே 1 லட்சத்து 19 ஆயிரத்து 310 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக விரைவாக 13 கோடி பேருக்கு தடுப்பூசி போட்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 13 கோடி இலக்கை இந்தியா வெறும் 95 நாளில் எட்டியுள்ளது. அமெரிக்காவில் 101 நாளிலும், சீனாவில் 109 நாட்களிலும் 13 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

* பழியிலிருந்து நழுவுகிறதோ?

கொரோனா முதல் அலையின் போது முழு ஊரடங்கு விதித்து அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மத்திய அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது. இதனால், 2வது அலையில் முழு ஊரடங்கு விதிக்க மத்திய அரசு தயாராக இல்லை. அந்தந்த மாநிலங்கள் நிலைமைக்கு ஏற்ப கட்டுப்பாடு விதிக்கலாம் என மாநில அரசின் தலையில் சுமையை இறக்கி விட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டையும் மாநில அரசுகளே சமாளிக்க வேண்டுமென கூறுகிறது. அந்த வரிசையில் தடுப்பூசிக்கான செலவையும் மாநில அரசின் தலையிலேயே கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தடுப்பூசி தட்டுப்பாடு என்ற பழியிலிருந்து நழுவிக் கொள்ளலாம், தடுப்பூசி விலை குறித்த பிரச்னையிலும் மாநில அரசுகளே பொறுப்பு என கூறியும் விடலாம்.

* மக்களுக்கு போடப்பட்டதில் 90% கோவிஷீல்டு தடுப்பூசி

இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 12 கோடியே 76 லட்சத்து 5,870 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம், அதாவது 11 கோடியே 60 லட்சத்து 65 ஆயிரத்து 107 தடுப்பூசிகள், தனியார் நிறுவனமான சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு மட்டுமே போடப்பட்டுள்ளது. மேலும், 15 மாநிலங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுவதாக சீரம் நிறுவனம் கூறி உள்ளது. மேலும், உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு தயாரிக்கப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி 1 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 763 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. ‘சுயசார்பு இந்தியா’ கொள்கையை மத்திய அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அந்த முக்கியத்துவத்தை உள்நாட்டு கண்டுபிடிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அது ஏன் அளிக்கவில்லை?’ என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் கிளப்பி உள்ளனர்.

* முதல் டோஸ் போட்ட 21,000 பேருக்கு தொற்று

கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு இரண்டில் ஏதோ ஒரு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட 21 ஆயிரம் பேருக்கும், 2வது டோஸ் போட்ட 5,500 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்று அளித்த பேட்டியில், ‘‘2வது டோஸ்  கோவாக்சின் செலுத்திக் கொண்ட 17 லட்சத்து 37 ஆயிரத்து 178 பேரில் 695 பேருக்கும் (0.04 சதவீதம்), கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட 1 கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 754 பேரில் 5,014 பேருக்கும் (0.03%) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதல் டோஸ் கோவாக்சின் செலுத்திக் கொண்ட 93 லட்சம் பேரில் 4,208 பேருக்கும் (0.04%), கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட 11.6 கோடி பேரில் 17,145 பேருக்கும் (10,000ல் 2 பேருக்கு) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மிக மிக குறைந்த எண்ணிக்கை என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை’’ என கூறினார்.

* ஒரு டோஸ் வெறும் ரூ.75: ஆய்வில் புதிய தடுப்பூசி

அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் புதிய கொரோனா தடுப்பூசியை கணடுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தடுப்பூசி விலங்குகளிடம் நடத்திய பரிசோதனையில் முழு வெற்றி பெற்றுள்ளது. இது பல வகையான உருமாற்ற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும், இனிவரும் புதிய உருமாற்றத்தையும் எதிர்க்கும் திறன் கொண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அனைத்தையும் விட இதன் விலை, ஒரே ஒரு அமெரிக்க டாலர் (ரூ.75) மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: