எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை வீராப்பு, தப்பு கணக்கு வேணாம் தயவு செய்து மாஸ்க் போடுங்கள்: பெண் டாக்டர் கண்ணீர் மல்க வேண்டுகோள்

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், மும்பையை சேர்ந்த திருப்தி கிலாடா என்ற பெண் டாக்டர், வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நாங்கள் எதுவுமே செய்ய முடியாத நிலையில் விக்கித்து நிற்கிறோம். இப்படி ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு வாழ்நாளில் சந்தித்ததே கிடையாது. பிற டாக்டர்களை போலவே நானும் கலக்கமுற்று இருக்கிறேன். என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. எனது இதயமே நொறுங்கி விட்டது. என்னை கவலைப்படச் செய்யும் விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் புரிந்து கொள்வதற்கு இது உதவலாம். யாருக்கேனும் உதவ முடியலாம்.

தயவு செய்து நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். முதலாவதாக, நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு கொரோனா தொற்று இல்லையென்றால், அல்லது தொற்று ஏற்பட்டு அதில் இருந்து குணமடைந்து இருந்தால், நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்றோ, ஓரளவு எதிர்ப்பு சக்தி வந்து விட்டது என்றோ நினைத்துக் கொள்ளாதீர்கள். அப்படி நினைத்தால் அது தவறு. இளம் வயதுடைய பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளதை நாங்கள் பார்க்கிறோம். ஆனால், எங்களால் அவர்களுக்கு உதவ முடியவில்லை.

இரண்டாவதாக, கொரோனா எல்லா இடத்திலும் பரவியுள்ளது. வீட்டை விட்டு வெளியில் வருவதாக இருந்தால், தயவு செய்து மாஸ்க் அணியுங்கள். எங்கே செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. மூன்றாவதாக, உங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தாலோ பீதி அடையாதீர்கள். உடனடியாக, மருத்துவமனையில் சேர முயற்சி செய்யுங்கள். எந்த மருத்துவமனையிலும் படுக்கை காலியாக இல்லை. சில படுக்கைகள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தனிமையில் இருங்கள். டாக்டர்களுடன் தொடர்பில் இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>