கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டும்: வேதாந்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு

சென்னை: கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளே இருக்கும் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக உள்ளது. மேலும் தொற்றால் பாதிப்படைந்து மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்சிஜன் வசதி இல்லை. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதனால் இந்த கொரோனா பேரிடர் காலத்தை அடிப்படையாகக் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை திறக்க அனுமதிக்க வேண்டும். அதனால் சுமார் 1500 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். மேலும் தினமும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரித்து தமிழகம் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இலவசமாக கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த இடைக்கால மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>