×

கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே வரலாம் தமிழக தோட்டத் தொழிலாளர்களை அனுமதிக்க மறுத்த கேரள போலீஸ்: கம்பம்மெட்டில் திடீர் சாலை மறியல்

கம்பம்: கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாததால் தமிழக தோட்ட தொழிலாளர்களை, கேரள போலீசார் திருப்பி அனுப்பினர். தேனி மாவட்ட எல்லையான கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் இருந்து ஏராளமான தமிழக தொழிலாளர்கள் 6 மாத கால இ-பாஸ் பெற்று, கேரள தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். தற்போது இ-பாசுடன், கொரோனா பரிசோதனை சான்றிதழும் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனக் கூறி, நேற்று காலை தமிழக தோட்ட தொழிலாளர்களை, கேரள போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், கம்பம்மெட்டு சாலை சிலுவைக்கோவில் அருகே பைபாஸ் ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கம்பம் வடக்கு போலீசார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கேரள போலீசாருடன் பேசினர். இதில் நாளை (இன்று) முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கேரள போலீசார் திட்டவட்டமாக கூறி நேற்று மட்டும் அனுமதி கொடுத்தனர். இது குறித்து ஏலத் தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெறுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இன்று டெஸ்ட் எடுத்தால் 3 நாட்கள் கழித்துதான் ரிசல்ட் வருகிறது. ரிசல்ட் வரும் வரை நாங்கள் வேலைக்கு செல்ல முடியாது. எனவே இந்த பிரச்னை குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Kerala ,Kammett , Kerala police refuse to allow Tamil Nadu plantation workers to come only if they have a corona certificate: Sudden road block
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...