முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா இழப்பீடு வழங்கக்கோரி தூய்மைப்பணியாளர் மனைவி மனு

மதுரை: தூய்மைப் பணியாளர் கொரோனாவுக்கு பலியானதால் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசு செயலர்கள் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் நாவினிபட்டியைச் சேர்ந்த பொண்ணுபிள்ளை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் நாகு, மேலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றினார். கடந்தாண்டு அக். 7ல் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை முடித்து மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை அதிகமாக இருந்தது. மூச்சு விடுவதில் மிகுந்த சிரமத்தில் இருந்தார்.

இதனால், மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அக். 23ல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொரோனா வார்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளராக என் கணவர் பணியாற்றினார். இதனால் தான் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அரசு அறிவித்துள்ளபடி, கொரோனா தடுப்பில் முன்களப் பணியாளராக பணியாற்றி இறந்துள்ளதால் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், இந்த மனுவிற்கு நகராட்சி நிர்வாக முதன்மை செயலர், பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர், மதுரை கலெக்டர், மேலூர் நகராட்சி கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரம் தள்ளி வைத்தார்.

Related Stories: