×

இரவு நேர ஊரடங்கின்போது தளர்வு அளிக்கப்பட்ட நபர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தடை மீறினால் வழக்கு என போலீஸ் எச்சரிக்கை

சென்னை: கொரோனா இரவு நேர ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்ட நபர்கள் வெளியே வரும் போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு உத்தரவுப்படி நேற்று முனதினம் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மாநிலம் முழுவதும் இரவு நேர முழு ஊரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவு 9 மணிக்கு மூடப்பட்டது. அரசு உத்தரவை மீறி இரவு 9 மணிக்கு மேல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி, மாநகரம் முழுவதும் 200 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரசு அனுமதி அளித்துள்ள நபர்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் அடையாள அட்டை அணிந்து வந்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்கள் யாரையும் போலீசார் வெளியே செல்ல அனுமதி வழங்க வில்லை. ேநற்று முன்தினம் முதல் நாள் ஊரடங்கு என்பதால் வெளியே சுற்றிய நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால், இரண்டாவது நாளான நேற்று முறையான அனுமதியின்றி வெளியே சற்றிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வழக்கம்போல், நேற்று இரவு 9 மணிக்கு அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூட அனைத்து பகுதிகளிலும் ரோந்து வாகனங்களில் சென்று போலீசார் அறிவுறுத்தினர். முக்கிய சாலைகளான அண்ணா சாலை, வடபழனி 100 அடி சாலை, ராஜிவ் காந்தி சாலை, ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, ஈவெரா நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. அதேபோல் மாநகரம் முழுவதும் உள்ள 38 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய ேமம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அரசு உத்தரவுப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு மாநிலம் முழுவதும் மூடப்பட்ட மாவட்ட எல்லைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாலங்கள் அனைத்தும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.

Tags : Identity card mandatory for relaxed persons during night curfew: Police warn of prosecution
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்