×

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை விவகாரம்; சிறப்பு டிஜிபிக்கு எதிரான விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியமில்லை என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.யான கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த புகார் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, விசாரணையை கண்காணித்து வருகிறது. சிறப்பு டிஜிபிக்கு எதிரான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்து வருகிறோம். அந்த வழக்கு ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பெண் எஸ்பி அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்ட உட்புகார் விசாரணை குழு, அதன் அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது என்றார்.

அப்போது சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வக்கீல், உட்புகார் விசாரணை குழுவின் விசாரணைக்கும், சிபிசிஐடி விசாரணைக்கும் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார் என்றார். இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் தொடர்பாக நடைபெறும் விசாரணையை தனி நீதிபதி கண்காணித்து வருகிறார். இதனால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு அவசியம் இல்லை. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சிறப்பு டிஜிபி மீதான விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேபோல நியாயமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடைபெற வேண்டும். ஒருதலைபட்சமாக முடிவெடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : DGP , Sexual harassment of female SP; The trial against the Special DGP should be conducted honestly: High Court order
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...