விவசாய கடன் தள்ளுபடிக்கு அரசு நிதி ஒதுக்காததால் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் கடும் அவதி

தேனி: அதிமுக அரசு கடந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக விவசாய கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைகள் அடமானம் வைத்திருந்தால் நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் ரூ.12 ஆயிரத்து 160 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்து விட்டதாக அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் பெருமை பேசி வந்தனர். அரசு விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிட்டதும், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த கால திமுக ஆட்சியின்போது ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டபோது, அந்த கடன் தொகையை அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு திமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

தற்போது, தமிழக அரசு விவசாய கடன் தள்ளுபடி செய்துவிட்டு பட்ஜெட்டின்போது ரூ.5 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்க உத்தரவிட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான தள்ளுபடி செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாக கூட்டுறவு சங்கங்களின் நிதிநிலை மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக கூட்டுறவு ஊழியர்கள் மத்தியில் குமுறல் எழுந்துள்ளது. ஏற்கனவே கடன் பெற்றவர்கள் அளிக்கும் வட்டி மூலம் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம், இதர செலவுகளை கூட்டுறவு நிர்வாகங்கள் செய்து வந்தன.

தற்போது கடன் தள்ளுபடி செய்து விட்டு, அந்த தொகையை அரசு ஒதுக்கீடு செய்யாததால், கூட்டுறவு சங்கங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கூட போட முடியாமல் தவித்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நகர வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள் உள்ளன. இச்சங்கங்களில் 400க்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் நிதிநிலை சுமாராக உள்ள சங்கங்களில் தற்போதைய நிலவரப்படி பணியாளர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் பரிதவித்து வருகின்றனர்.

Related Stories: