கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் படுக்கைகள் மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்தலாமா?.. அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளால் படுக்கைகள் நிரம்பி வரும் நிலையில், மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தலாமா என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 20 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 59 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருவதால் சென்னை உட்பட பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது.

தொடர்ந்து, மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், படுக்கைகள் நிரம்பி இருப்பதால் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த சூழலில் அனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் மருத்துவமனைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் அவசர அறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் கூடுதலாக படுக்கை வசதிகள் செய்ய வசதிகள் உள்ளதா என்பது தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கை வசதிகள் செய்து தரலாம் என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>