தூத்துக்குடிக்கு மரக்கட்டைகள் ஏற்றி வந்த கப்பலில் ரூ.1,500 கோடி கொக்கைன் சிக்கியது எப்படி? 2வது நாளாக அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி வந்த கப்பலில் பிடிபட்ட ரூ.1500 கோடி கொக்கைன் போதை பொருள் தொடர்பாக தூத்துக்குடி மற்றும் செங்கோட்டையை சேர்ந்த சிலரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி வழியாக கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் ரூ.610 கோடி மதிப்பிலான கிறிஸ்டல் மெத்தாம்பெட்டமைன், சாரஸ், ஹஷீஷ் உள்ளிட்ட போதை பொருட்களுடன் துப்பாக்கிகளும் சிக்கியுள்ளன.

இந்நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த கன்டெய்னர்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பனாமா துறைமுகமான பல்போவாவில் இருந்து செங்கோட்டையை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த மரக்கட்டைகள் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு பெல்ஜியம் துறைமுகமான அன்ட்வெர்ப், இலங்கை துறைமுகம் கொழும்பு ஆகியவற்றின் வழியாக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த கப்பல் நேற்று முன்தினம் காலை 10.40 மணிக்கு தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது. மாலையில் மத்திய வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்று சந்தேகப்படும்படியான 8 கன்டெய்னர்களை இறக்கி சோதனை செய்தனர். அவற்றில் 6 கன்டெய்னர்களில் மரக்கட்டைகளுக்கு மத்தியில் 9 பெரிய பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அதில் பல்வேறு அடுக்குகளாக பார்சல் செய்யப்பட்ட, கொடிய போதை பொருளான கொக்கைன் இருந்ததும் தெரியவந்தது.

இவற்றை கையாள வசதியாக செங்கல் வடிவில் மாற்றி வைத்துள்ளனர். மொத்தம் 303 கிலோ எடையிலான கொக்கைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1500 கோடி. ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவை பனாமா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்றும், தூத்துக்குடியில் உள்ள ஒரு பிரபல ஷிப்பிங் நிறுவனம் ஏஜென்டாக செயல்பட்டு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு மரக்கட்டைகளை இறக்குமதி செய்து கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நிறுவங்களை சேர்ந்த நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இது குறித்து தூத்துக்குடி துறைமுக தக்‌ஷின்பாரத் கன்டெய்னர் முனையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து விசாரணை நடத்தினர். சர்வதேச போதை பொருள் கடத்தல் மாபியாவுடன் தொடர்பில் உள்ள தூத்துக்குடி நபர் ஒருவர் குறித்தும் விசாரித்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

* கெடுபிடி இல்லாததால் தூத்துக்குடி தேர்வு

மும்பை, கொல்கத்தாவில் கொக்கைன் அதிக அளவு பிடிபடுவது வழக்கம். அங்கு கெடுபிடி அதிகரித்ததால் கடத்தல் கும்பல் தூத்துக்குடியை தேர்வு செய்து, கொக்கைன் போதை பொருள் கடத்தலை இங்கு அரங்கேற்றியுள்ளது என்று கூறப்படுகிறது.

* முன்னரே ரகசிய தகவல்

தமிழகத்தில், தூத்துக்குடியில்தான் ரூ.1500 கோடி மதிப்பிலான கொக்கைன் போதை பொருள் முதன்முறையாக பிடிபட்டுள்ளது. இந்த கொக்கைன் கடத்தல் விவகாரத்தில் மத்திய வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு முன்னரே ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் இதற்கு முன்னர் இதுபோன்று கன்டெய்னர்களில் ஏதேனும் கொக்கைன் கடத்தப்பட்டுள்ளதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: