கொரோனா தடுப்பூசியை ரூ.150 சப்ளை செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்து, மே 1ம் தேதிக்குள் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் வெளிப்படையான முறையில் விலையை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பிறகும், இவ்வாறு கடுமையான விலை உயர்வை தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல் மட்டுமல்ல, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும் ஆபத்து மிகுந்ததாக இருக்கிறது.

மே 1ம் தேதியிலிருந்து 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் 50 விழுக்காடு தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்றும், மீதியுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளுக்கு அந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்கூட்டியே ரூ.4500 கோடி  மத்திய அரசு இப்போது செலுத்துகிறது. ஆனால் மாநில அரசுகள் உடனடியாக நிதிக்கு எங்கே போகும்.

மத்திய அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை எப்படிச் செயல்படுத்த முடியும். மத்திய அரசுக்கு ரூ.150க்கு தடுப்பூசியை விற்பனை செய்ய முன்வரும் அந்த தயாரிப்பு நிறுவனம், மாநில அரசுகளுக்கு மட்டும் ரூ.400  விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்? எனவே, அனைத்து மாநிலங்களுக்குமே மத்திய அரசுக்கு விற்பனை செய்யும் விலையான தடுப்பூசி ஒன்றிற்கு ரூ.150 என்ற விலைக்கே சப்ளை செய்திட தடுப்பூசி நிறுவனங்களை அழைத்துப் பேசிட வேண்டும் எனவும், அதற்குரிய கூடுதல் நிதியையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>