கொரோனாவை தடுப்பதில் அலட்சியம் ஆளாளுக்கு அதிகாரம் செய்வதால் அரசு இயந்திரம் முடங்கிக்கிடக்கிறது: கமல் குற்றச்சாட்டு

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் 2ம் அலை தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என கணிக்கிறார்கள் நிபுணர்கள். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்சிஜன் இல்லை. ரெம்டெசிவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம். பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வருபவர்களிடம் மது, புகை போன்ற பழக்கம் இருக்கிறதா என்பது பற்றியோ, உடல்நிலையைப் பற்றியோ, வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றியோ கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.

குறைந்தபட்சம் ரத்த அழுத்தம் கூட பார்க்கப்படுவதில்லை. ஊசி போட்டபின் போனில் அழைத்து கூட உடல்நலம் குறித்து விசாரிக்கப்படுவதில்லை. முதல் தவணை முடிந்து 2வது தவணை தடுப்பூசி போடச் சென்றால் மருந்து கையிருப்பு இல்லை என்கிறார்கள். தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி குறித்த அச்சமும் பரவலாக நீடிக்கிறது. உலகமே மருந்துக்கு திண்டாட ஏப்ரல் 11ம் தேதி வரை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 54,28,950 தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

தேர்தல் முடிவை எதிர்பார்த்து முடங்கிக்கிடக்கிறதோ தமிழக அரசு எனும் ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. மாநில அரசுகள் மருந்து கொள்முதல் செய்வதில் முழு சுதந்திரம் இன்னமும் அளிக்கப்படவில்லை. தீர்வுகளை தரமுடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல என்பதைப் புரிந்துகொண்டு முன்னகர வேண்டும். ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>