ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட கசிவால் 24 நோயாளிகள் மூச்சுத்திணறி பலி

* நாசிக் மாநகராட்சி மருத்துவமனையில் சோகம்

* பலியானோர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிவாரணம்

* உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தவ் உத்தரவு

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாநகராட்சி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவால் சப்ளை தடைபட்டதால், அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 24 பேர் மூச்சுத்திணறி இறந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் டாக்டர் ஜாகிர் உசேன் என்ற பெயரில் மாநகராட்சி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 150 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 23 பேருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதற்காக அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த டேங்கில் நேற்று நண்பகல் சுமார் 12.30 மணியளவில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது. அப்போது திடீரென காஸ் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக நோயாளிகளுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் சப்ளை கிடைக்கவில்லை. இதனால், நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சுவாசிக்க முடியாமல் துடிதுடித்து 24 நோயாளிகள் இறந்தனர். ஆக்சிஜன் தேவைப்பட்ட 80 பேரில் 31 பேர் வேறு மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டனர். முன்னதாக, ஆக்சிஜன் கசிவு தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உடனடியாக வாயுக்கசிவை தடுத்து நிறுத்தினர். மேலும், தொழில்நுட்ப கோளாறுகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பே கூறியதாவது: நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்வதில் தடங்கல் ஏற்பட்டதால் நோயாளிகள் இறந்தது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு முழு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை நிறைவடைந்ததும் அறிக்கை வெளியிடுவோம் என்றார். குறைந்தளவு ஆக்சிஜன் சப்ளை காரணமாகவே நோயாளிகள் இறந்ததாக, அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்த முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அவர் வெளியிட்ட அறிக்கையில் பலியான நோயாளிகளின்் உறவினர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தலா ₹5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்’ என கூறியுள்ளார். நாசிக் மருத்துவமனை சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தள்ளனர். சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கண்முன் நிகழ்ந்த மரணங்கள் கலங்கித் துடித்த உறவினர்கள்

ஆக்சிஜன் சிலிண்டர் கசிவால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தால், மருத்துவமனை வளாகம் முழுக்க உறவினர்களின் அழுகுரல்கள் எதிரொலித்தன. இதுகுறித்து ஒருவர் கூறுகையில், ‘‘எனது சகோதரரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதால், அவரை 2 நாளில் டிஸ்சார்ஜ் செய்வதாக டாக்டர்கள் கூறியிருந்தனர். இன்று காலை அவருக்கு சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தேன். அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் ஆக்சிஜன் திடீரென தடைபட்டது. 2 மணி நேரத்தில் என் கண்முன்பே எனது சகோதரரர் இறந்து விட்டார்.

இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை’’ என சோகத்துடன் கூறினார். இதுபோல் பெண் ஒருவர் கூறுகையில், ‘‘நான் எனது தாய்க்கு உதவியாக மருத்துவமனையில் இருந்தேன். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மூச்சுத்திணறி இறந்தார்’’ என கண்ணீருடன் தெரிவித்தார்.

Related Stories:

>