×

கொரோனா பரவலுக்கு மத்தியில் மேற்குவங்கத்தில் நாளை 6ம் கட்ட வாக்குப்பதிவு: அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் பாதுகாப்பு

கொல்கத்தா: கொரோனா பரவலுக்கு மத்தியில் மேற்குவங்கத்தில் நாளை 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில் ஏற்கெனவே 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. நாளை (ஏப். 22) 6ம் கட்ட வாக்குப்பதிவும், 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள இரண்டு கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. நாளை 43 தொகுதிகளில் நடைபெறவுள்ள ஆறாம் கட்டத் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது.

இதில், பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், திரிணாமுல் அமைச்சர்களுமான ஜோதிபிரியா மாலிக், சந்திரிமா பட்டாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தன்மே பட்டாச்சார்யா ஆகியோர் உள்பட மொத்தம் 306 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் திரைப்பட இயக்குநர் ராஜ் சக்கரவர்த்தி, நடிகை கவுஷானி முகர்ஜி ஆகியோரும் இந்த ஆறாம் கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 6ம் கட்ட வாக்குப்பதிவில் 53.21 லட்சம் ஆண் வாக்காளர்கள், 50.65 லட்சம் பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி  பெற்றுள்ளனர்.

 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க 1,071 கம்பெனி மத்திய படைப் பிரிவினர் மற்றும் மாநில ேபாலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுப்  பரவலால் பிரசாரத்துக்கும் வாக்குப் பதிவுக்கும் இடையேயான அமைதி நேரத்தை 48  மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரமாக தேர்தல் ஆணையம் அதிகரித்ததையடுத்து,  பிரசாரம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : West Bengal , Phase 6 polls in West Bengal tomorrow amid corona spread: extra security to avoid untoward incidents
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி