அணைக்கட்டு தாலுகாவில் 33 கிராமங்களில் பயிர் விளைச்சல் கணக்கெடுப்பு: வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு

அணைக்கட்டு: அணைக்கட்டு தாலுகாவில் வேளாண் துறை சார்பில் 33 கிராமங்களில் பயிர் விளைச்சல் கணக்கெடுப்பு பணியை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வட்டாரத்திற்பட்ட பகுதியில் 30 கிராமங்களில் நெல் விளைச்சல் குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் அணைக்கட்டு வட்டாரத்தில் கந்தனேரி உள்ளிட்ட 33 கிராமங்களில் நெல், கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் குறித்து கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பயிர்கள் அறுவடை செய்யும் சமயத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேர்வு செய்யப்பட்டுள்ள 33 கிராமங்களில் கடந்த ஒருவாரமாக அறுவடை செய்யப்பட்டு வரும் வயல்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா தலைமையில் பயிர் காப்பீடு திட்ட அலுவலர்கள் விளைச்சல் குறித்து கணக்கெடுத்து விவரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது, இதன் மூலம் அப்பகுதியில் விளைச்சல் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா? என கணக்கெடுக்கப்படும். இயற்கை சீற்றம், மழை போன்ற பாதிப்புகளால் விளைச்சல் குறைந்திருக்கும் பட்சத்தில் இந்த கணக்கெடுப்பின் மூலம் அவர்களுக்கு இழப்பீடு கிடைக்கவும், விளைச்சலை தொடர்ந்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவும், இந்த கணக்கெடுப்பு பயன்படுகிறது. கந்தனேரி பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சராசரி மகசூல் இந்த முறை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது’ என்றனர்.

Related Stories: