தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.1,500 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் தூத்துக்குடிக்கு வரும் கன்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது தென் அமெரிக்க நாடான சுரிநாமில் இருந்து தூத்துக்குடியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த மரக்கட்டைகள் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு சிங்கப்பூர், இலங்கை வழியாக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அங்கு இருந்து மரக்கட்டைகள் வைக்கப்பட்ட 8 கன்டெய்னர்கள் சந்தேகப்படும்படியாக இருந்துள்ளது. இதனால் 6 கன்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர். அதில் ஒரு கன்டெய்னரில் மரத்தடிகளுக்கு இடையே சிறிய மூட்டைகளாக மொத்தம் 30 மூட்டைகள் இருந்துள்ளன. அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கொக்கைன் என்ற சுமார் 300 கிலோ எடை கொண்ட போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதைப்பொருள்களின் சர்வதேச மதிப்பு ரூ.1500 கோடி என்று கூறப்படுகிறது.

இந்த போதை பொருள்கள் விலை அதிகமானது என்பதால் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலில் தொடர்புடைய சர்வதேச கடத்தல் மாபியாவுடன் இங்கு தொடர்பில் இருந்த நபர்கள் யார்? என்றும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே மத்திய வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த கப்பலை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அந்த கப்பல் மற்றும் மீதமுள்ள சந்தேகப்படும்படியான கன்டெய்னர்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை விடிய விடிய நடந்தது.

அதிகாரிகளின் இந்த சோதனையை முன்னிட்டு அந்த கப்பல் தளத்திற்கு அருகே சுங்கத்துறையினர் தவிர பாதுகாப்பு துறையை சேர்ந்த யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அந்த கப்பலில் இருந்த ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டு மாலுமி உள்ளிட்ட 24 இந்திய மாலுமிகள் யாரையும் கப்பலில் இருந்து இறங்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கடந்த சில மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கடல் வழியாக இந்தியாவிற்குள் கோடிக்கணக்கிலான போதை பொருள் கடத்தி வரப்பட்டு சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் தேச பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தொடரும் போதைபொருள் கடத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் ரூ.610 கோடி மதிப்பிலான கிறிஸ்டல் மெத்தாம்பெட்டமைன், சாரஸ், ஹஷீஷ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியுள்ளன. தற்போது ரூ.1500 கோடி மதிப்புள்ள 300 கிலோ கொக்கைன் போதை பொருள் சிக்கியது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories: