தமிழக அரசுக்கு தெரியாமல் 45000 கிலோ ஆக்சிஜன் பறித்த மத்திய அரசு...தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் மேலும் அதிர்ச்சி

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் பல மாநிலங்கள் திணறி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசிடம் தகவல் தெரிவிக்காமல், மத்திய அரசு தமிழகத்திலிருந்து 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. இது தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதி வேகத்தில் பரவி வருகிறது. நாடு முழுவதும் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா சிகிச்சை நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை பல மாநிலங்களில் உருவாகியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்கள் மத்திய அரசிடம் ஆக்சிஜன் வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை வார்டுகளில் 75 சதவீத பெட்டுகளில் நோயாளிகள் உள்ளனர். இன்னும் 25 சதவீத பெட்டுகள் மட்டுமே காலியாக உள்ளன. இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் தற்போது தமிழகத்தில் கையிருப்பு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் 45 மெட்ரிக் டன்(45 ஆயிரம் கிலோ) ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஆக்சிஜன் தேவை உள்ள நிலையில், தமிழக அரசிடம் எந்த கலந்தாலோசனையும் செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கே போதுமான ஆக்சிஜன் இல்லாத நிலையில் பக்கத்து மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்ப உத்தரவிட்டிருப்பது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சென்னையில் நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. குறிப்பாக 36 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் 25,987 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இதில், 8,369 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன.

சென்னையில் 10,568 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இதில், 3,671 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்கள் ஆக்சிஜன் தேவைகள் அதிகரிக்க கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நேரத்தில், மாநில அரசுக்கு தெரிவிக்காமல், மத்திய அரசு பக்கத்து மாநிலங்களுக்கு ஆக்சிஜனை மாற்ற உத்தரவிட்டுள்ளது, தமிழக அரசை மதிக்காமல் செயல்படுவதாகவும், ஒரு புழு, பூச்சியைப்போல கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: