விரிவாக்கம் என்ற பெயரில் நெல்லை - தென்காசி 4 வழிச்சாலையில் வெட்டப்படும் பழமையான மரங்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை: நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அச்சாலையில் காணப்படும் பழமையான மரங்கள் தற்போது வெட்டப்பட்டு வருகின்றன. அங்குள்ள  மரங்களை வெட்டாமல் இடம் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டர்களிடம் தெரிவித்து வருகின்றனர். போக்குவரத்து நெருக்கடியை கணக்கில் கொண்டு நெல்லை - தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலை வழியாக நெல்லையில் இருந்து கேரளாவிற்கு வாகனங்கள் எளிதில் செல்ல இயலும் என்பதால், சாலை விரிவாக்கத்திற்கு பொதுமக்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் 4 வழிச்சாலை பணிகள் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் அப்பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. நெல்லை - தென்காசி மார்க்கத்தில் மொத்தமுள்ள 45.6 கிமீ சாலையானது, இருவழிப் பாதையில் இருந்து 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. நெல்லை - தென்காசி சாலையானது தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் மிகமுக்கிய சாலையாக இருப்பதோடு, கேரளாவிற்கான வர்த்தக போக்குவரத்திற்கும் தேவையானதாக உள்ளது.

இந்த சாலை வழியாக தினசரி 500க்கும் மேற்பட்ட சிமெண்ட், மரத்தடி, காய்கறிகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் அனைத்து பொருட்களும் கனரக வாகனங்களில் எடுத்து செல்லப்படுகின்றன. இந்நிலையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நெல்லை- தென்காசி சாலையில் உள்ள பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருகின்றன. 2018ம் ஆண்டிலும் நெல்லை - தென்காசி இருவழிச் சாலையின் ஓரத்தில் காணப்பட்ட புளி, வேம்பு, வாகை மற்றும் நூற்றாண்டு பழமையான ஆலமரங்கள் உட்பட 1160 முழுமையாக வளர்ந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறை வெட்டியது. தற்போதும் 4 வழிச்சாலைக்காக இருபுறமும் உள்ள நிறைய மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரத்திற்கும் தென்காசிக்கும்  இடைப்பட்ட தூரத்தில் பசுமையான மரங்கள் வெட்டப்படும் சூழ்நிலையில் உள்ளது.  எனவே அந்த மரங்களை வெட்டாமல் இயந்திரங்கள் உதவியுடன் மாற்றி அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து நெல்லை, தென்காசி கலெக்டர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ‘‘சம்பந்தப்பட்ட துறைக்கு உரிய நடவடிக்கைக்காக மனு அனுப்பப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘நகர்புற வளர்ச்சி மற்றும் போக்குவரத்து தேவை அடிப்படையில், நெல்லை - தென்காசி சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இச்சாலையானது தமிழகம்- கேரளாவிற்கான வர்த்தக போக்குவரத்து சாலையாக இருப்பதோடு, சுற்றுலா அந்தஸ்தும் பெற்றுள்ளது. குற்றாலம், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இச்சாலை பிரதான சாலையாகும். எனவே சாலை விரிவாக்கம் அவசியமாகும்.

அதே சமயம் அங்கு காணப்படும் பழமை வாய்ந்த மரங்களையும், பசுமை நிறைந்த மரங்களையும் வெட்டி சாய்க்காமல் இயந்திரங்கள் உதவியோடு, மாற்றியமைத்து பாதுகாக்க முற்பட வேண்டும். நெல்லையில் இருந்து தென்காசிக்கு பயணிக்கும் பயணிகள், ஆலங்குளத்திற்கு பின்னர் இயற்கையான ஒரு சாரல் காற்றை அனுபவிக்க இத்தகைய மரங்களே முக்கிய காரணம். எனவே 4 வழிச்சாலையானது இயற்கையான காற்றுக்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்பட வேண்டும். சமீபகாலமாக தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. மரங்களை வெட்டாமலே இடம் மாற்றி அமைக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. எனவே இயந்திரங்கள் மூலம் பசுமையான இளம் மரங்களை இடம் மாற்றி வைக்கும் போது நான்கு வழிச்சாலை பசுமையாக காட்சி அளிக்கும்.’’ என்றனர்.

Related Stories: