கொளுத்தும் கோடை வெயிலால் கொடுமுடியாறு அணை நீர்மட்டம் சரிந்தது

களக்காடு: திருக்குறுங்குடி பகுதியில் கொளுத்திவரும் கோடை வெயிலால்   கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 5.25 அடியாகச் சரிந்தது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்ட கொடுமுடியாறு அணையின் வாயிலாக நாங்குநேரி, ராதாபுரம் வட்டாரங்களைச் சேர்ந்த 44  பாசன குளங்கள் பயன்பெறுகின்றன. அத்துடன் சுமார் 5,780.91 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் திருக்குறுங்குடி, வள்ளியூர், ஏர்வாடி, ராதாபுரம் வட்டார மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், பல்லாயிரக்கணக்கான கால்நடைகளின் தாகத்தையும் தீர்த்து வைக்கிறது.

ஆனால், கடந்த சில வாரங்களாக களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில்  கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பகலில் அனல்  காற்று வீசுவதோடு  இரவிலும் கடும் புழுக்கம் நிலவுகிறது. இவ்வாறு கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால்  கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 5.25 அடியாக உள்ளது. அணையின் மொத்த  கொள்ளளவு 52.5 அடியாகும். இதன்காரணமாக திருக்குறுங்குடி சுற்று வட்டாரப்  பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையத் துவங்கியுள்ளது.

இதேபோல் விவசாய கிணறுகளிலும்  நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது . இதனால் அணை பாசன  கால்வாய்களையொட்டியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடி தண்ணீர்  தட்டுப்பாடும், பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படும் சூழ்நிலை  நிலவுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் கொடு முடியாறு அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு  பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Related Stories: