இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தினாலும் 45க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது...சென்ட்ரலில் இருந்து 17 ரயில்கள் இயக்கம்

சென்னை: இந்தியாவில் கொரோனா 2வது அலை படுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் விடியற்காலை 4 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பரவல் காரணமாக சென்னையில் பணியாற்றிவரும் வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயிலுக்காக காத்து கிடக்கின்றனர். தற்போது சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுவதால் எப்படி தங்களுடைய ஊருக்கு செல்வது என்று தெரியாமல் ரயில் நிலையங்களில் குடும்பத்துடன் காத்து கிடக்கின்றனர். முக்கியமான ரயில் நிலையங்களில் இருந்து வடமாநிலங்களான ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு 45 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு 3, மேற்கு வங்கம் 10, ஒடிசா 2 மற்றும் உபிக்கு 2 என 17 சிறப்பு ரயில்களும் ஆலப்புழாவில் இருந்து சட்டீஸ்கருக்கு 7 சிறப்பு ரயில்களும் திருவனந்தபுரம் ஜங்சனில் இருந்து மேற்கு வங்கம், 2, அசாம் 1 என 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம் ஜங்சனில் இருந்து பீகார் 3, மேற்கு வங்கம் 1, ஜார்க்கண்ட் 2 என 6 சிறப்பு ரயில்களும், கொச்சிவேலி ஜங்சனில் இருந்து உ.பி.க்கு 3 சிறப்பு ரயில்களும், நாகர்கோவில் ஜங்சனில் இருந்து மேற்கு வங்கத்துக்கு 1 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

புதுச்சேரியில் இருந்து மேற்கு வங்கம் 1, ஒடிசா 1 என 2 சிறப்பு ரயில்களும், ராமேஸ்வரத்தில் இருந்து  ஒடிசா 1, உ.பி. 1 என 2 சிறப்பு ரயில்களும் தாம்பரத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு 1 சிறப்பு ரயில்களும் திருச்சி ஜங்சனில் இருந்து மேற்கு வங்கத்துக்கு 2 சிறப்பு ரயில்களும் கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்துக்கு 1 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதையடுத்து பீகாருக்கு 6, மேற்கு வங்கம் 17, ஒடிசா 4, உ.பி. 6, சட்டீஸ்கர் 7, அசாம் 3, ஜார்க்கண்ட் 2 என 45 சிறப்பு ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும். இந்த ரயில்களில் முன்பதிவு செய்து யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: